மறுபடியும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று : சென்னை, கோவையில் பரிசோதனைகள் அதிகரிப்பு !

மறுபடியும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று : சென்னை, கோவையில் பரிசோதனைகள் அதிகரிப்பு !

Share it if you like it

தமிழகத்தில் மூன்று அலைகளாக பரவி பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்தது. இரண்டரை ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கையை இழந்த மக்கள், கடந்த ஓராண்டாகத்தான் கொரோனாவின் அச்சத்திலிருந்து மீண்டெழுந்துள்ளனர். இத்தகைய சூழலில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதன்படி தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியாவைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் ஜெஎன்1 வகை கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. ஓமைக்ரான் கொரோனா தொற்றின் உட்பிரிவான பிஏ 2.86 பைரோலா வைரஸிலிருந்து உருமாற்றமடைந்ததாகக் கூறப்படும் இந்த வகை வைரஸ் மிக விரைவாக ஒருவரிடமிருந்து மற்றொருக்கு பரவும் என்றும் இணை நோயாளிகள், முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள், எதிர்ப்பாற்றலை குறைக்கும் சிகிச்சை பெறுபவர்களுக்கு பாதிப்புகளை அதிகரிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் 25-க்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை ஜெஎன்.1 வகை தொற்று யாருக்கும் உறுதிபடுத்தப்படவில்லை. புதிய வகை பாதிப்பு ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ளத் தேவையான கட்டமைப்பு இங்குள்ளது. தொற்று பரவல் அதிகரிக்கும் இடங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, கோவை மாவட்டங்களில் வரும் நாட்களில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படவுள்ளன. மாநிலத்தில் தேவையான எண்ணிக்கையில் ஆர்டி பிசிஆர் உபகரணங்கள் உள்ளன. புதிய வகை கொரோனா தொற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. நோய்த் தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடித்தால் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம். பொது இடங்களில் முகக் கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், அடிக்கடி சோப் மூலம் கைகழுவுவதையும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share it if you like it