இன்று நடந்த சட்டசபையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தும் தீர்மானம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து திமுக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் முதல் 4 தேர்தல்கள் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே சமயத்தில் தான் நடந்தது என்பதை தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் மறந்து இருக்கலாம்.
ஆனால், அவரது தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான திரு.கருணாநிதி அவர்கள் எழுதிய சுயசரிதையை கூட முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் படித்ததில்லை என்பது உள்ளபடியே வருத்தம் !
ஒரே நாடு ஒரே தேர்தலை பற்றி திரு.கருணாநிதி அவர்கள் கூறியதாவது :-
ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களை சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவர செயல்படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரம் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும், பொதுமக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று கருதுகிறேன்.
நெஞ்சுக்கு நீதி – இரண்டாம் பாகம் பக்கம் 273 ல் கருணாநிதி தான் பத்திரிகையாளர்கள் மற்றும் திமுகவினரிடம் பேசியதை பற்றி எழுதியுள்ளார்.