கடந்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசம் சென்றது குறித்து தூதரக ரீதியில் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனாவின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும் “இத்தகைய வருகை மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமாகாது” என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், சீனாவின் கருத்துகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசம் சென்றது குறித்து சீனா தெரிவித்துள்ள கருத்தை இந்தியா நிராகரிக்கிறது. நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களுக்கு இந்தியத் தலைவர்கள் செல்வது போல அருணாச்சலப் பிரதேசத்துக்கும் காலம் தோறும் சென்று வருகின்றனர்.
இத்தகைய வருகை அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது நியாயமாக இருக்காது. மேலும், அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும் என்ற யதார்த்தத்தை சீனாவின் கருத்து மாற்றாது. இந்த நிலைப்பாட்டைப் பற்றி பல முறை சீனா அறிந்தே உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த வாரத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் தாவங் பகுதியில் கட்டப்பட்டுள்ள சேலா சுரங்கப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தது குறித்து, இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள சர்ச்சைக்குரியப் பகுதிகளுக்கு இந்திய ராணுவத் துருப்புகள் எளிதாக செல்ல இது உதவும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், “இந்தியாவால் அருணாச்சலப் பிரதேசம் என்று அழைக்கப்படும் பகுதியை சீனா அங்கீகரிக்கவில்லை. மேலும் இதனை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்.
இது தொடர்பான இந்தியாவின் நகர்வு இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை மேலும் சிக்கலாக்கும். இதனால் சீனா மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது. இந்தியா – சீனா எல்லைப் பகுதியின் கிழக்கு பகுதிக்கு இந்தியத் தலைவர்களின் வருகையை சீனா எதிர்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறிவரும் சீனா, அருணாச்சலப் பிரதேசத்துக்கு இந்தியத் தலைவர்களின் வருகைக்கு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மேலும் அந்தப் பகுதிக்கு ஷங்னன் என்றும் பெயரிட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் தங்களின் பகுதி என்ற சீனாவின் கூற்றினை தொடர்ந்து மறுத்து வரும் இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் அந்தப் பகுதிகளுக்கு பெயரிடுவது யதார்த்தத்தில் எந்த விதமாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது என்றும் தெரிவித்துள்ளது.