கர்நாடகாவில் 14 லோக்சபா தொகுதிகளுக்கு மே 7ம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, கடந்த 27ம் தேதி இரவு, பிரதமர் நரேந்திர மோடி பெலகாவி வந்தார். நேற்று முன்தினம் பெலகாவி, தாவணகெரே, ஹாவேரி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
நேற்று பாகல்கோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில், பாகல்கோட், விஜயபுரா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், அரசு கஜானாவை கொள்ளையடித்து காலி ஆக்கிவிட்டது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர், விஜயபுரா உட்பட மாநிலத்தின் பல இடங்களில் விமான நிலையம் வந்தது. பாகல்கோட் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தி உள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு இல்லை. இப்போது அந்த கிராமங்கள், மின்விளக்கில் ஜொலிக்கின்றன. தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஜல்ஜீவன் திட்டம் கொண்டு வரப்பட்டது. 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க வுக்கு முந்தைய ஆட்சியாளர்கள் ஏன் எதுவும் செய்யவில்லை.
ஏழைகள், பட்டியலின மக்கள் நலனில் காங்கிரஸ் அக்கறை செலுத்தவில்லை. இதனால் அந்த சமூக மக்கள் ஒடுக்கப்பட்டனர். பா.ஜ.க ஆட்சியில் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி உள்ளோம். எடியூரப்பா முதல்வராக இருந்த போது, விவசாயிகளுக்கு உதவினார். இங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், ஊழலில் திளைக்கிறது.
பெங்களூரு தொழில்நுட்ப மையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இப்போது டேங்கர் நகரமாக மாற்றி உள்ளனர். டேங்கர் மாபியா மூலம், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ‘2ஜி’ போன்று மிகப்பெரிய ஊழலை செய்ய, காங்கிரஸ்காரர்கள் காத்து இருக்கின்றனர். ஊழல் நிறைந்த அந்த கட்சிக்கு, பாடம் புகட்ட வேண்டும். நாட்டை கொள்ளையடிக்கும் அவர்களிடம், நாட்டை கொடுக்க முடியுமா?
வாக்கு வங்கி, திருப்திபடுத்தும் அரசியலுக்காக ஹூப்பள்ளி மாணவி கொலை வழக்கை, அரசு பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஹனுமன் பாடல் கேட்டதற்காக, கடை உரிமையாளர் தாக்கப்பட்டார். ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பை, சிலிண்டர் வெடிப்பு என்கிறார் கர்நாடக அரசின் பிரதிநிதி. அப்பாவி மக்களை கொல்ல நினைப்பவர்களை சும்மா விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.