கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், “நிர்மலா தேவி படித்தவர் என்பதாலும், அவருக்கு குழந்தைகள் இருப்பதாலும் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று அவரது தரப்பு முறையிட்டது. ஆனால், இந்தியாவில் இது மாதிரியான குற்றங்களே தற்போது புற்றுநோய் போல் பரவி வருகிறது. நீதிமன்ற தீர்ப்புகள் மூலமே இதனை சரிசெய்ய முடியும். எனவே, இதுபோன்ற வழக்குகளில் இரக்கம் காண்பிக்க கூடாது என்று அரசு சார்பில் வாதிட்டோம். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டன.