இடைத்தேர்தலை ஜூன் 1-ஆம் தேதி நடத்தக்கூடாது : வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும் – ராமதாஸ் !

இடைத்தேர்தலை ஜூன் 1-ஆம் தேதி நடத்தக்கூடாது : வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும் – ராமதாஸ் !

Share it if you like it

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ஆம் தேதி நடத்தக்கூடாது: வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் அண்மையில் காலியான விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை, மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து ஜூன் 1-ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இது சரியான நேரம் அல்ல.

ஜூன் 1-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், அதற்கான மனுத்தாக்கல் மே 7-ஆம் நாள் தொடங்கப்பட வேண்டும். தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் மூன்றாவது அதிக வெப்பநிலை ஒதிஷா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் தான் பதிவாகி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கூட கடுமையான வெப்பம் தகிக்கிறது.

தமிழ்நாட்டில் மே 4-ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்குவதாகவும், அப்போது 116 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பரப்புரை மேற்கொண்டால் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வெப்பச் சொறி, வேனல் கட்டி, வெப்பப் பிடிப்பு, வெப்பத் தசைவலிப்பு, தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். இவற்றை விட கொடிய வெப்ப மயக்க நோய் (Heat Stroke) ஏற்பட்டால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக கடந்த ஏப்ரல் 8-ஆம் நாள் தான் அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதிக்கு அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தினால் போதுமானது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும், அக்டோபர் மாதத்தில் ஹரியானா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தபட வேண்டும் என்பதால் அவற்றுடன் இணைந்து விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக தீர்மானிக்கக் கூடாது. தமிழக அரசு மற்றும் கட்சிகளுடன் கலந்து பேசி தான் தேர்தல் தேதியை தீர்மானிக்க வேண்டும். ஜூன் 1-ஆம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால், அந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *