பழமை வாதத்தை உடைத்தெறிவோம் என்ற பெயரில் பண்பாடு கலாச்சாரத்தை சீரழிப்பதா? ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டுள்ள காவல்துறை தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சென்னை பெருநகர காவல் துறையின் சமூக வலைதள பக்கத்தில் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை உருவாக்குவோம். தனிமனித உரிமையை கொண்டாடுவோம் இன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக செய்தி வந்துள்ளது. தமிழகம் பண்பாடு கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம். கற்பு நெறி, குடும்ப வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் என உலகத்திற்கே உதாரணமாக திகழும் தமிழகத்தில் இந்த செய்தி பல பேரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் உடலுறவு கொள்வது தனிமனித உரிமை என்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் தனிமனித உரிமைகள் அதை நிலைநாட்டுவோம் என்பதாகவும் இந்த செய்தி அமைகிறது . வேலியே பயிரை மேய்ந்த கதையாக சட்டம் ஒழுங்கை பாதுகாத்து மக்களை நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டிய காவல்துறை LGPTQ மக்களின் உரிமைக்காக போராடுகிறேன் என்ற பெயரில் செயல்படுவது நமது பாரம்பரிய சமூகத்திற்கு ஒவ்வாத செயலாகும். ஏற்கனவே நீதிமன்றத்தின் மூலமாக இது மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்குமதி செய்யும் செயலாகும் என்று 2008 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது . அதன் பிறகு இடது சாரி சிந்தனையாளர்களால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற 377வது பிரிவை நீக்கி உத்தரவிட்டது. கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுக்கங்களால் கட்டமைக்கப்பட்ட நமது பாரதத்தில் ஒரு சிலரால் திட்டமிடப்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியாக கலாச்சாரம் சீரழிவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற ஓரினச்சேர்க்கை முறையை ஆதரிப்பவர்கள் நமது தேசத்தின் பழக்கவழக்கங்களை எதிர்ப்பவர்களாகவும் அந்நிய நாட்டு பழக்கவழக்கங்களை நமது நாட்டில் ஆதரிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் இந்திய ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியின் ஜெயா ஜெட்லி போன்றோர் LGPTQ மக்களுக்காக வாதாடுகிறோம் என்ற பெயரில் நமது பண்பாட்டின் ஸ்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கினர் . ஏற்கனவே தமிழகம் கஞ்சா போதை பழக்க வழக்கங்களால் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதிகப்படியான கொலைகளும் எண்ணிலடங்கா விபத்துகளும் தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைபொருட்கள் புழக்கத்தினாலேயே ஏற்படுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த கஞ்சா பழக்கம் இந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து பகுதிகளிலும் சுலபமாக கிடைக்கும் வகையில் பரவி கிடக்கிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மூலமாக மதுவிற்கு அடிமையாகி பல குடும்பங்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. மதுவை தாண்டி கஞ்சா அபின் மெத்த பெட்டமைன் இன்னும் பல வகையான போதைப் பொருள்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் புழக்கத்தில் இருக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கும் வேளையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான இந்த காவல்துறையின் பிரச்சாரம் மேலும் சட்டம் ஒழுங்கை பாதிக்கும். பழமை வாதத்தை முறியடிப்போம் வாருங்கள் என அறைகூவல் விடுக்கும் காவல்துறை முஸ்லிம் கிறிஸ்தவ மதத்தில் எத்தனையோ பழமை வாதங்கள் உள்ளன. அவர்களின் பழமைவாத பழக்கவழக்கங்களுக்கு எதிராக இவர்கள் செயல்பட முடியுமா ? இவர்கள் சொல்ல வருவது என்ன.? ஒழுக்கம் கட்டுப்பாடு கலாச்சாரம் பண்பாடுகளை பாதுகாத்தல் ஆகியவற்றை பழமை வாதம் என குறிப்பிடுகிறார்களா எனும் கேள்வி எழுகிறது .
தமிழக காவல்துறை தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அப்படி என்றால் இந்த ஓரினச்சேர்க்கை ஆதரவு என்பது தமிழக அரசின் நிலைப்பாடா என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. எத்தனையோ காவல்துறையினர் தங்களது சுக துக்கங்களை மறந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற பணிசெய்து வரும் வேளையில் காவல்துறை சமூக வலைதள பக்கத்திலேயே இந்த செய்தி வெளிவருவது காவல்துறையின் பெயரை கெடுப்பதற்காகவா? இல்லை தமிழகத்தில் புழங்கி வரும் அதீத போதை பொருள்கள் புழக்க செய்திகளை திசை திருப்புவதற்காகவா? என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. பேசுதல் எழுதுதல் வேலை வாய்ப்பு கல்வி கருத்து சுதந்திரம் இவைகள் தான் தனிமனித உரிமையாக கருதப்படும். மாறாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தனிமனித உரிமையை கொண்டாடுவோம் வாருங்கள் என்று தன்னம்பிக்கை தருவது முழுக்க முழுக்க நமது கலாச்சாரத்தை வேரறுக்கும். செயலாகும்.
தமிழர் பண்பாடு தமிழர் கலாச்சாரம் இன்று மேடைக்கு மேடை பேசும் தமிழ் ஆர்வலர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். குடி மற்றும் போதை பழக்கங்களால் சீரழிந்து வரும் தமிழகத்தை போதையில் இருந்து மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. அதேபோல கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பே தோன்றிய மூத்த குடியாகிய தமிழின பண்பாட்டை சீரழிக்கும் இந்த ஓரினச்சேர்க்கையாளர் ஆதரவு பிரச்சாரத்தை காவல்துறையின் தமிழக அரசும் உடனே நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.