அபுதாபியில் நிறுவப்படவுள்ள முதல் ஹிந்து கோயிலின் கட்டுமானப் பணிகளை, 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பிரமிப்படைந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், சுவாமி நாராயணன் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 55,000 சதுர அடி பரப்பில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இக்கோயிலில், கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட, சுவாமி நாராயணன் கோயில் நிர்வாகம் மற்றும் இந்திய துாதரகம் சார்பில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் இக்கோயிலுக்கு நேற்று வருகை தந்தனர். பின்னர், அங்கு நடைபெறும் கோயில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தவர்கள், கலைநயத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சிற்ப வேலைப்பாடுகளை பார்த்து ரசித்ததோடு, பிரமிப்பும் அடைந்தனர். மேலும், இப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய துாதரக அதிகாரிகள், தங்களுக்கு எழுந்த சந்தேகங்களையும் கேட்டறிந்தனர்.