மீண்டும் ஸ்டாலின் வீடு முற்றுகை: ஏ.பி.வி.பி. எச்சரிக்கை!

மீண்டும் ஸ்டாலின் வீடு முற்றுகை: ஏ.பி.வி.பி. எச்சரிக்கை!

Share it if you like it

கைது செய்யப்பட்ட மாணவர் அமைப்பினரை விடுவிக்கா விட்டால், மீண்டும் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று ஏ.பி.வி.பி. எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தஞ்சாவூர் மைக்கேல்பட்டியிலுள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த, அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதம் மாற மறுத்ததால், பள்ளி நிர்வாகத்தின் டார்ச்சர் தாங்க முடியாமல், லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பா.ஜ.க., ஹிந்து முன்னணி, வி.ஹெச்.பி. உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் லாவண்யாவின் மரணத்துக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டன. நாடு முழுவதும் இப்போராட்டம் எதிரொலித்தது.

ஆனால், லாவண்யா மரணத்தில் கட்டாய மத மாற்றத்துக்கான ஆதாரங்கள் இல்லை என்று தஞ்சை எஸ்.பி. ரவளி ப்ரியா தெரிவித்தார். இதனால், மாநில போலீஸாரின் விசாரணை நியாயமாக இருக்காது எனக் கருதி, சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார் லாவண்யாவின் தந்தை முருகானந்தம். இதை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. விசாரணையே தொடரும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லி விட்டது.

இதைத் தொடர்ந்து, லாவண்யா மரண விவகாரத்தை கையில் எடுத்தது ஆர்.எஸ்.எஸ். இயக்தத்தின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.). லாவண்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பிப்ரவரி 14-ம் தேதி காலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் வெகுண்டெழுந்த ஏ.பி.வி.பி.யின் தலைமை அமைப்பினர், பிப்ரவரி 15-ம் தேதி டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு, ஸ்டாலின் உருவபொம்மையை எரித்தனர். இதேபோல, ஆந்திரா, ஒடிஸா, குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஏ.பி.வி.பி. அமைப்பினர் ஸ்டாலின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடு முழுவதும் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், இன்று (பிப்.16-ம் தேதி) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஏ.பி.வி.பி. நிர்வாகிகள், ‘கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அல்லது ஸ்டாலின் வீட்டை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதுதான் தமிழகத்தில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it