பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சுதந்திரமாக உலா: ஐ.நா.வில் இந்தியா வேதனை!

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சுதந்திரமாக உலா: ஐ.நா.வில் இந்தியா வேதனை!

Share it if you like it

இந்தியாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக ஐ.நா.வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார், ஐ.நா. கூட்டத்தில் குற்றம்சாட்டி வேதனை தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளும், பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாதிளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், 1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தீவிரவாதிகள் அரங்கேற்றினர். இதில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1000-த்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பின்னர், 1998-ல் கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இதில் 60 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 2001-ல் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து, 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல, 2016-ம் ஆண்டு பதான்கோட் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாதிகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 2019-ம் ஆண்டு புல்வாமா என்கிற இடத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் வந்த வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இப்படியாக, இந்தியா மீது 10-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஐ.நா.வில் பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிரவாத தடுப்புக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார், இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத சம்பவங்களை உலகம் பார்த்திருக்கிறது. இவற்றில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இத்தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் அண்டை நாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை நாம் அனைவருமே அறிவோம். அந்த நாடும் தீவிரவாதிகளுக்கு முழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், அத்தீவிரவாதிளை தியாகிகளைப் போல அந்நாட்டு தலைவர்கள் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள். இப்படியாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அந்த நாட்டிற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதாவது, பாகிஸ்தானைத்தான் அந்த நாடு என்று மறைமுகமாக குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.


Share it if you like it