பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தில், ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி, ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட வி.ஹெச்.பி. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், படத்தின் போஸ்டர்களை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரும்பாலான பாலிவுட் திரைப்படங்களில் ஹிந்துக்களையும், ஹிந்து மத உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில், ஹிந்து சாமியார்களை வில்லன்களாகவும், ஹிந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையிலும், கேலி கிண்டல் செய்யும் வகையிலும், காட்சிகள் இடம்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் கொதித்தெழுந்த ஹிந்துக்கள், பாலிவுட் படங்களுக்கு எதிராகவும், இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு எதிராகவும் பாய்காட் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர். இந்த சூழலில், சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் சத்தா என்கிற திரைப்படத்துக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட்டாக்கிய நிலையில், அப்படம் படுதோல்வி அடைந்தது.
அதேபோல, தற்போது நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் பதான். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடல் காட்சிகளில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் நடித்திருந்தார். இது கடுமையான சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பல்வேறு ஹிந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இப்பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது. அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா, ஒருபடி மேலே போய், காவி நிறம் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. நடிகர் ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிருடன் கொளுத்தி விடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், காவி நிற அவமதிப்பு செய்த பதான் படம் திரையிடும் திரையரங்குகளை எரிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த சூழலில், குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் பதான் படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்று கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடந்தது. ஆல்பா ஒன் மாலில் நடந்த நிகழ்ச்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இளைஞர் பிரிவான பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்து, நடிகர் ஷாருக்கான் மற்றும் பிற நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், போஸ்டர்கள், பெரிய அளவிலான கட் அவுட்டுகள் உள்ளிட்டவற்றை கிழித்து வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இப்படம் திரையிடப்பட்டால் இதைவிட கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று அந்த வணிகவளாக நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்து, கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளிவந்தன. இதற்கு இரு தினங்களுக்கு முன்பு, மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரிலும் ஹிந்து ஜக்ரான் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, படம் திரையிடப்படக் கூடாது என்று திரையரங்க நிர்வாகத்தினரை எச்சரித்து விட்டுச் சென்றனர். அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி நகரில் பதான் படம் வெளியாகக் கூடிய திரையரங்குகளுக்குள் புகுந்த பஜ்ரங் தள் அமைப்பினர் போஸ்டர்களை கிழித்து, எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்தான், பதான் திரைப்படம் இன்று வெளியானது. இதையடுத்து, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூருவில் வி.ஹெச்.பி. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பதான் படம் வெளியிடப்பட்ட தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, போஸ்டர்களையும் தீவைத்து எதிர்த்து தங்களது எதிர்ப்பை வெளிபடுத்தினர். இதேபோல, நாடு முழுவதும் பதான் திரைப்படம் வெளியிடப்பட்ட பல்வேறு தியேட்டர்களின் முன்பு வி.ஹெச்.பி. மற்றும் ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அத்தியேட்டர்களின் முன்பு பரபரப்பான சூழல்நிலை காணப்பட்டது.