நடிகர் விஜய் – சொல் ஒன்று?! செயல் ஒன்றா?!
நமது நாட்டில் “மக்களாட்சி” என்பது இந்த நூற்றாண்டோ அல்லது கடந்த நூற்றாண்டோ தோன்றியது அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே, நமது நாட்டில் “மக்களாட்சி” என்பது இருந்து வருகின்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் காணப்படும், கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டே அதற்கு சாட்சி. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை, அந்தப் பகுதியை ஆண்ட மன்னர்கள் காலத்தின் கல்வெட்டுகள், அதற்கு சான்றாக திகழ்கின்றன.
பண்டைய காலத்திலேயே, கிராமங்கள் வார்டுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வார்டிலும் வசித்தவர்கள், அந்த வார்டுகளில் மக்கள் பிரதிநிதிகளை, “குடவோலை முறை” என்று அழைக்கப்பட்ட முறையில் தேர்ந்து எடுத்தனர்.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அவதிக்குள்ளான கிராம பஞ்சாயத்து:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், “நில வருவாய் நிர்வாகம்” தனியார் துறையிடம் ஒப்படைக்கப் பட்டது. இதனால், கிராமத்தில் வசிப்பவர்கள், தங்களது பணிகளை தாமே நிர்வகித்துக் கொண்ட சுயசார்பு நிலையானது, படிப்படியாக குறைந்து “கிராம பஞ்சாயத்துகளின்” முக்கியத்துவமும் படிப்படியாக குறைந்தது. சாதாரண உள்ளூர் பணிகளுக்கு கூட, மைய அதிகார அமைப்பை எதிர்நோக்கும் சூழ்நிலை உருவாயின. இதனால், கிராம பஞ்சாயத்து முறை, மிகவும் அவதிக்கு உள்ளாகின.
அதற்கு மீண்டும் புத்துயிரூட்ட, 1920 ஆம் ஆண்டு, “மதராஸ் கிராம பஞ்சாயத்துகள் சட்டம்” ஏற்படுத்தப் பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் மூலம், 25 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்கு உரிமை வழங்கியதுடன், பஞ்சாயத்துகளின் அனைத்து உறுப்பினர் தேர்தலுக்கும், அது வழி வகுத்தது.
1930 ஆம் ஆண்டு காலத்தில், பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை உயர்த்தப் பட்டு, “மெட்ராஸ் லோக்கல் போர்டு” சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட “ஒன்றியங்களுக்கு நிகரான நிலையில்” பஞ்சாயத்துகள் வடிவமைப்பு செய்யப் பட்டது. அதற்கு, கூடுதல் அதிகாரங்களும் வழங்கப் பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி பதவி மற்றும் வார்டுகளின் எண்ணிக்கை:
பதவி – இடங்களின் எண்ணிக்கை
நகர்ப்புறம்
மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் – 1,064
நகராட்சி வார்டு உறுப்பினர்கள் – 3,468
பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் – 8,288
ஊரகம்
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் – 655
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் – 6,471
கிராம ஊராட்சித் தலைவர்கள் – 12,524
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் – 99,324
வாக்குச்சீட்டும் அதன் வண்ணங்களும்:
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு – வெள்ளை நிற வாக்கு சீட்டும்,
சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு – வெள்ளை அல்லது நீலம் நிற வாக்கு சீட்டும்,
சிற்றூராட்சி தலைவர் தேர்தலுக்கு – இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டும்,
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு – பச்சை நிற வாக்கு சீட்டும்,
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு – மஞ்சள் நிற வாக்கு சீட்டும் பயன் படுத்தப்படும்.
2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல் :
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த, புதியதாக உருவான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி என ஒன்பது மாவட்டங்களுக்கு, 2021 ஆம் ஆண்டு, அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கையானது, அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல், செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 22ம் தேதி வரை இருந்தது.
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே, ஆளும் கட்சி தான் எப்போதும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அன்றைய ஆளும் கட்சியான அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அது போலவே, தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் கட்சியான திமுக, அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.
இத்தகைய போட்டியின் நடுவில், 8 யூனியன் கவுன்சிலர்கள், 41 பஞ்சாயத்து தலைவர்கள், 332 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 381 இடங்களில், பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று, தங்களுடைய பலத்தை நிரூபித்து உள்ளது.
நடிகர் விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டி :
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த, மாவட்ட அளவிலான 20 முக்கிய நிர்வாகிகளுடன், விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், செப்டம்பர் 17 ஆம் தேதி, 2021 அன்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில், விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடலாம் எனவும், விஜய்யின் பெயர், புகைப்படம் மற்றும் இயக்கக் கொடியை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டது.
169 இடங்களில் போட்டியிட்ட விஜய் ரசிகர்கள், 121 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். அதிலும் குறிப்பாக, 13 இடங்களில் போட்டி இல்லாமலும், 108 இடங்களில் போட்டியிட்டு வாக்குகள் பெற்று, தேர்தல் மூலமாக வெற்றி பெற்று உள்ளனர்.
குழப்பத்தை ஏற்படுத்திய அறிவிப்பு :
தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ அல்லது தனது பெயரையோ, தன்னுடைய தந்தை, தாய் மற்றும் 11 பேர் பயன் படுத்துவதை தடை செய்யக்கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில், நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
ஒருபுறம் தன்னுடைய ரசிகர்களை தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்தும், மறுபுறம் தனது பெயரை தனது பெற்றோர்கள் பயன்படுத்த, தடை விதிக்கக் கோரியும் என இரட்டை நிலைப்பாட்டுடன், நடிகர் விஜய் செயல் படுவது, பொதுமக்கள் மட்டுமல்லாது அவர் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியது.
அரசியலுக்கு வர விருப்பம் இருந்தால், நேரடியாகவே வந்து இருக்கலாம் எனவும், ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் :
நடிகர் விஜய் அவர்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, தனது வாக்கை செலுத்துவதற்காக, மிதிவண்டியில் பயணம் செய்தார். உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை மறைமுகமாக தாக்குகிறார் என தொலைக்காட்சி சேனல்கள், அன்று அதை விளம்பரப் படுத்தியது.
எங்கு சென்றாலும், தனது சொகுசு காரில் பயணம் செய்யும் நபர், தேர்தல் அன்று மட்டும் மிதி வண்டியில் பயணம் செய்தது ஏன்? என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. அதற்கு அடுத்தோ அல்லது அதற்கு முன்பாகவோ, எப்போது அவர் மிதிவண்டியில் பயணம் செய்தார் என்பது யாரும் அறிந்திடாத நிகழ்வாகவே உள்ளது.
வரி விலக்கு :
விலை உயர்ந்த “ரோல்ஸ் ராய்ஸ்” கார் வாங்க, வசதி உள்ள நடிகர் விஜய்க்கு, அதற்கு உண்டான வரியை கட்ட, ஏன் மனம் வரவில்லை? அதற்காக வரி விலக்கு வேண்டி, ஏன் நீதிமன்றத்தை நாட வேண்டும்? என நீதிபதியே கேள்வி எழுப்பினர்.
தவறான கருத்து :
2017 ஆம் ஆண்டு வெளியான “மெர்சல்” படத்தில், ஜி.எஸ்.டி. குறித்து நடிகர் விஜய், தவறான கருத்துக்களை வெளியிட்டது, அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசாங்கத்தை தவறாக விமர்சித்த நபர், 100 கோடி தடுப்பூசி செலுத்தி, சாதனை செய்த, மத்திய அரசை, ஏன் இதுவரை எந்த ஒரு பாராட்டுதலையும் தெரிவிக்கவில்லை? என அவரது ரசிகர்களே, அவரை நோக்கி தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜனநாயக நாட்டில், யாரும் அரசியலுக்கு வரலாம் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், நேரடியாக வராமல் மறைமுகமாக மக்களின் கட்டாயத்தின் பேரில், தான் அரசியலுக்கு நுழைந்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த, நடிகர் விஜய் இவ்வாறு செய்கின்றாரோ? என சமூக ஆர்வலர்கள் சந்தேகித்து வருகின்றனர்.
- அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
Good article