கடவுளுக்கு ஆண், பெண் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. எல்லோருமே ஒன்றுதான். அதேபோல, தீட்டு என்பது கடவுள் சொன்னதில்லை. நாமே உருவாக்கிய சட்டம்தான் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜியோ பேபி என்பவரது இயக்கத்தில் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியான படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருக்கும் இப்படம் ஆணாதிக்க சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை விளக்கிக் கூறியிருக்கிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ஆர்.கண்ணன் இயக்கி, தயாரித்து வருகிறார். இதில், நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும், சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரத்தில் ராகுல் ரவீந்திரனும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம், “மலையாள படத்தில் சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதற்கு ஆதரவாக பேசியிருப்பார்கள். இதை தமிழில் எப்படி கையாண்டிருக்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுளுக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. மேலும், என் கோயிலுக்கு இவர்கள் வரக்கூடாது, அவர்கள் வரக்கூடாது என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதேபோல, இதை சாப்பிடக் கூடாது, இது தீட்டு என்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை. இவையெல்லாம் நாம் உருவாக்கின சட்டங்கள்தான். இதையேத்தான் இப்படத்திலும் சொல்லியிருக்கிறோம். கடவுளுக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கா.பெ.ரணசிங்கம் படத்தில்கூட இதைப் பற்றி பேசியிருப்பேன். என்னை பொறுத்தவரை நான் இதையெல்லாம் நம்புவதேயில்லை” என்று கூறியிருக்கிறார்.
இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுதான் ஹிந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், தங்களுக்கு எதிராக ஏதேனும் பிரச்னைகள் தலைதூக்கும்போது, இதை திசை திருப்பும் வகையில், யாராவது பிரபலங்களை தூண்டி விட்டு, ஹிந்துக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசச்சொல்வதை தி.மு.க. தலைமை வாடிக்கையாக வைத்திருக்கிறது. அந்தவகையில், அமைச்சர் நாசர் கல்லைத் தூக்கி கட்சி நிர்வாகி மீது எறியும் வீடியோ நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல, திருச்செந்தூர் கோயில் கோசாலையில் இருந்து 5,000 மாடுகளை காணவில்லை என்று பா.ஜ.க. அண்ணாமலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டி இருந்தார். மேலும், கோயில் உண்டியலில் இருந்து அதிகாரிகள் காசை திருடி, டீ, காபி, ஸ்நாக்ஸ் சாப்பிடுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரங்களை திசை திருப்பவே, ஐஸ்வர்யா ராஜேஷை தி.மு.க. தலைமை தூண்டி விட்டு, இவ்வாறு பேசச் சொல்லி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.