கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பேப்பரே இல்லாத இடத்தில் பேனா எதுக்கு வைக்கணும் என்று நடிகை கஸ்தூரி கிண்டல் செய்திருக்கிறார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சென்னை வடபழனியில் 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், “மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கட்சியைக் கடந்து நான் நிறைய விமர்சித்துள்ளேன். ஆனால், திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுவை வழங்கலாம் என்று தற்போது தி.மு.க. அரசு அறிவித்தது. இதை தி.மு.க. கட்சிக்காரர்களே விமர்சித்த பிறகு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள். ஆனால், வாபஸ் வாங்கவில்லை. ஆகவே மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால்தான் இம்மாதிரியான அநியாயங்களை நிறுத்த முடியும்.
கடலில் பேனா வைப்பது பெரிதல்ல. ஒவ்வொரு வீட்டில் பேனா பிடித்து குழந்தைகள் பள்ளிக்கூடம் போக வேண்டும். அதுதான் பெரிது. கலைஞரை மரியாதை பண்ண வேண்டும் என்றால், நூலகங்கள் கட்டணும். அதைவிடுத்து, திருவள்ளுவர் சிலையை விட ஒரு அடி அதிகமாக, அதுவும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் கடலில் பேனா வைக்கிறீர்கள். பேனா வைக்கலாம், பேனா வைக்க இடமாக இல்லை? உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சென்னது. அதுக்கு வங்கக்கடல்தான் கிடைத்ததா? அங்கதான் வைக்கணுமா? அங்க எழுதக்கூட முடியாதே. பேப்பரே இல்லாத இடத்தில் பேனாவை எதுக்கு வைக்கணும்.
சினிமாவில் வேலை செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தாலும்கூட, வேலை செய்வது மிகவும் கடினம். அப்படி இருக்கும்போது, தொடர்ச்சியாக ஓய்வு இல்லாமல் 12 மணி நேரம் தொழிலாளர்களால் எப்படி வேலை செய்ய முடியும்? 4 நாட்கள் பட்டினியாக இருந்துவிட்டு 3 நாட்கள் சேர்த்து சாப்பிட முடியுமா? அதேபோலதான் அரசாங்கத்தின் 12 மணி நேர வேலை திட்டம். இது சாதாரண மக்களுக்கு எப்படி பயனளிக்கும்” என்று ஆளும் தி.மு.க. அரசை வெளுத்து வாங்கி இருக்கிறார்.