வெட்டி கொன்னுடுவாங்கன்னு பயமா இருக்கு: தி.மு.க.வை பங்கம் செய்த காங். கவுன்சிலர்!

வெட்டி கொன்னுடுவாங்கன்னு பயமா இருக்கு: தி.மு.க.வை பங்கம் செய்த காங். கவுன்சிலர்!

Share it if you like it

மாநகராட்சியில் தண்ணீர் திருட்டு நடக்கிறது. தகவல் சொன்னால் வெட்டிக் கொன்று விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கவுன்சிலர் கூறியது தி.மு.க. அரசின் அவலநிலையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

தூத்துக்குடி மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. கூட்டம் தொடங்கியதும் பேசிய அ.தி.மு.க. கொறடா மந்திரமூர்த்தி, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் தமிழக அரசு மதுபானத்திற்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ரெக்சிலின் ஆகியோர் அவரை கூட்ட அரங்கில் இருந்து வெளியே பிடித்து தள்ளினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய தி.மு.க. கவுன்சிலர் சுரேஷ்குமார், “கோடைக் காலத்திலும் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இக்குடிநீரை சிலர் திருடி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், “தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரிக்கு எதிரில் 4 இடங்களில் இரவு பகலாக லாரி மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஏற்கெனவே 2 சட்டவிரோத குடிநீர் இணைப்புகளை நீங்கள் துண்டித்ததால்தான் இதை சொல்கிறேன். இல்லை என்றால் நான் சொல்ல மாட்டேன் என்று கூறினார்.

இதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி, மக்கள் பிரதிநிதிக்கு இதை சொல்வதுதான் வேலை. அதற்குத்தான் மாமன்றம் உள்ளது என்றார். அதற்கு கவுன்சிலர் சந்திரபோஸோ, தகவல் சொன்னால் வெட்டிக் கொலை செய்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. காரணம், மணல் கொள்ளையை தடுத்த ஒரு அப்பாவி வி.ஏ.ஓ.வை கொலை செய்து விட்டனர். அதனால்தான் சொல்ல வருகிறேன் என்றார். ஆளும்கட்சி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கவுன்சிலரே, இப்படி பயமாக இருக்கிறது என்று கூறியதால், கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், நாள்தோறும் கொலை, கொள்ளைதான் நடக்கிறது. தி.மு.க. ஆட்சியின் லட்சணம் இதுதான் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share it if you like it