ஆப்கானிஸ்தான் பள்ளியில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பலியாகி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறார்கள். இங்கு, சன்னி முஸ்லீம்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இரண்டாவது பெரும்பான்மையினராக ஷியா முஸ்லீம்களும், மூன்றாவது பெரும்பான்மையினராக ஹசாரா முஸ்லீம்களும் இருந்து வருகின்றனர். இவர்களில் ஹசாரா பிரிவினர் தாழ்த்தப்பட்ட சமூதாயமாகக் கருதப்படுகின்றனர். பெரும்பான்மை பிரிவினரான சன்னி மற்றும் ஷியா பிரிவினர் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி குண்டுவெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றி படுகொலை செய்து வருகின்றனர். அந்த வகையில், இவர்களது தாக்குதலுக்கு ஹசாரா பிரிவினரும் தப்புவதில்லை.
இந்த நிலையில்தான், ஹசாரா பிரிவு குழந்தைகளை குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆப்கான் தலைநகர் காபூல் நகரின் மேற்கு பகுதியான தஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் காஜ் கல்வி மையம் இயங்கி வருகிறது. இக்கல்வி நிறுவனத்தில் நேற்று பயிற்சித் தேர்வு நடைபெறவிருந்தது. ஆகவே, சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். தேர்வுக்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்த நிலையில், கல்வி நிலையத்துக்குள் புகுந்த ஒரு மர்ம நபர், திடீரென தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடல் சிதறி பலியாகினர். மேலும், ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, தகவலறிந்து பள்ளியில் குவிந்த பெற்றோர் கதறி கண்ணீர் விட்டனர். இதையடுத்து, உயிரிழந்த மாணவி, மாணவிகளின் உடல்களை அடையாளம் கணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தஷ்ட்-இ-பார்ச்சி பகுதி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அதிகம் தாக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் இருப்பது தெரிகிறது.