ஆப்கனில் மாஜி பெண் எம்.பி. சுட்டுக்கொலை: தாலிபான் பயங்கரவாதிகள் வெறிச்செயல்!

ஆப்கனில் மாஜி பெண் எம்.பி. சுட்டுக்கொலை: தாலிபான் பயங்கரவாதிகள் வெறிச்செயல்!

Share it if you like it

ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் எம்.பி. முர்சல் நபிஜடாவும், அவரது பாதுகாவலரும் தாலிபான்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

1996 முதல் 2001-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தவர்கள் தாலிபான்கள். பாகிஸ்தான் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள், அடிப்படைவாத கொள்கைகளை பின்பற்றுபவர்கள். எனவே, அந்நாட்டில் வசிக்கும் பெண்கள் கல்வி கற்கக் கூடாது. தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் வகையிலான புர்காவை அணிய வேண்டும். பெண்கள் பொதுவெளியில் நடமாடக் கூடாது. வேலைக்குச் செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இதை மீறும் பெண்களுக்கு கசையடி கொடுப்பது. பொதுவெளியில் மரண தண்டனை விதிப்பது என அட்டூழியம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை தகர்த்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, 2001-ம் ஆண்டு நேச நாட்டுப் படைகளுடன் சேர்ந்து தாலிபான்களை விரட்டியடித்து ஜனநாயக ஆட்சியை மலரச் செய்தது. இதன் பிறகு, பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைத்தன. எனினும், 20 ஆண்டுகள் கழித்து கடந்தாண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர் தாலிபான்கள். இதையடுத்து, வழக்கம்போல பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான், ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் எம்.பி.யான முர்சல் நபிஜடா என்கிற இளம்பெண்ணை சுட்டுக்கொன்றிருக்கிறார்கள் தாலிபான்கள். அதாவது, அமெரிக்கா ஆதரவுடன் இருந்த மாஜி ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் 2019-ம் ஆண்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முர்சல் நபிஜடா. 32 வயது இளம்பெண்ணான நபிஜடா, ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹரைச் சேர்ந்தவர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த நிலையில், அந்நாட்டிலேயே தங்கி இருந்த ஒரு சில எம்.பி.க்களில் இவரும் ஒருவர். காபூல் நகரத்தில் வசித்து வந்தார். இவரது வீட்டிற்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்று விட்டது.

இச்சம்பவத்தில், முர்சல் நபிஜடாவும், அவரது பாதுகாவலர் ஒருவரும் கொல்லப்பட்டனர். அவரது சகோதரரும், மற்றொரு பாதுகாவலரும் பலத்த காயமடைந்தனர். 3-வது பாதுகாவலர், முர்சல் நபிஜடாவின் வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றுடன் தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நபிநஜடா, ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். இந்த சூழலில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைவர்களில் ஒருவரான மரியம் சோலைமான்கில் தனது ட்விட்டர் பக்கத்தில், நபிஜடா ஆப்கானிஸ்தானின் அச்சமற்ற சாம்பியன் என்று புகழஞ்சலி செலுத்தி இருக்கிறார்.


Share it if you like it