ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கும் தாலிபான்கள், பெண்கள் பெண் டாக்டரிம்தான் வைத்தியம் பார்க்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு போட்டிருப்பது அனைவரைுயம் எள்ளி நகையாட வைத்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டுவரை இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தாலிபான்களின் கையில் சிக்கி தவித்து வந்தது. இவர்கள் பாகிஸ்தான் பழங்குடியின பகுதிகளில் இருந்து தோன்றியவர்கள். சுன்னி முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுபவர்கள். எனவே, ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெண்களை அடிமைகளைப் போல நடத்தினார்கள். பெண்கள் வீட்டை விட்டு வெளியில் நடமாடக் கூடாது. பெண்களுக்கு கல்வி கிடையாது என ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்து வந்தன. 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் அரங்கேறிய பிறகு, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகளுடன் ஒன்றிணைந்து தாலிபான்களை விரட்டியடித்தது.
பின்னர், ஆப்கானிஸ்தானை கைப்பற்றி, ஜனநாயக ஆட்சியை மலரச் செய்தனர். இதன் பிறகு, மீண்டும் பெண்களுக்கு கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைத்தது. இதனிடையே, தங்களது படைபலத்தை அதிகரித்த தாலிபான்கள், ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். எனவே, 2021 ஆகஸ்ட் 31-ம் தேதி அமெரிக்க படைகளை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன் பிறகு, ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபான்கள், பெண்கள் வழக்கம்போல் கல்வி பயிலலாம். அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
ஆனால், ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் தங்களது விளையாட்டை ஆரம்பித்து விட்டார்கள். முதல்கட்டமாக பெண்கள் தலை முதல் கால் வரை புர்கா அணிய வேண்டும் என்று சட்டம் போட்டார்கள். பிறகு, பெண்கல் மேல்படிப்பு படிக்க அனுமதி இல்லை என்று மறுத்தார்கள். பின்னர், பெண்கள் வெளியிடங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்றால் ஆண் துணையுடன்தான் செல்ல வேண்டும் என்று கண்டிசன் போட்டினர். மேலும், பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது, இரு சக்கர வாகனம் ஓட்டக் கூடாது, ஓட்டலில் ஆண், பெண் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக் கூடாது என கண்டிசன்களுக்கு மேல் கண்டிசன்களாக போட்டுத் தள்ளினர்.
இதனால், பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். இவர்களை துப்பாக்கி கட்டைகளால் கொடூரமாகத் தாக்கி விரட்டி அடித்தார்கள். இதனால், விதியை நொந்து கொண்டு வேறு வழியின்றி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் பெண்கள். இந்த சூழலில்தான், பெண்கள் நோய்வாய்ப்பட்டாலோ, கர்ப்பமடைந்தாலோ பெண் டாக்டரிடம்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்கள் தாலிபான். இதில் உச்சபட்ட காமெடி என்னவென்றால், பெண்கள் கல்வி கற்கவே கூடாது என்று சொல்லும் தாலிபான்கள், பெண்கள் பெண் டாக்டரிடம்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவித்திருப்பதுதான்.
இதையறிந்த ஆப்கானிஸ்தான் பெண்கள், அமெரிக்காவின் தயவால் எங்கள் நாட்டு பெண்களுக்கு கல்வியறிவு கிடைத்தது. இதனால், எங்கள் நாட்டில் தற்போது பெண் டாக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், தற்போது தாலிபான்கள் பெண்கள் கல்வி கற்க தடை போட்டிருக்கிறார்கள். எனவே, எதிர்காலத்தில் பெண் டாக்டர்களே இருக்க மாட்டார்கள். அப்போது நாங்கள் எந்த பெண் டாக்டரிடம் சிகிச்சை பெற முடியும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தவிர, தாலிபான்களின் இந்த அறிவிப்பு, உலக நாடுகள் மத்தியில் எள்ளி நகையாட வைத்திருக்கிறது.