அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்தே இழப்பீடை வசூலிக்க உத்தரப் பிரதேச மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்திய ராணுவத்தில் அதிக அளவிலான இளைஞர்களை சேர்க்கும் வகையிலும், ராணுவத்தை வலுப்படுத்தும் வகையிலும் அக்னிபாத் என்கிற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இத்திட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சில மாநிலங்களில் மத்திய பா.ஜ.க. அரசு மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, சிலர் வன்முறையை தூண்டி விட்டனர். குறிப்பாக, உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெரிய அளவில் வன்முறைகள் அரங்கேறின.
பல இடங்களில் ரயில்கள், பஸ்கள், கார்கள், போலீஸ் ஜீப்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தினர். அரசு அலுவலகங்களும், பா.ஜ.க. அலுவலகங்களும், பா.ஜ.க. நிர்வாகிகளின் வீடுகளும் சூறையாடப்பட்டன. இந்த வன்முறையால் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், உத்தரப் பிரதேசத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீஸார் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர். இதுவரை 1,120 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தலைமறைவானவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய போராட்டக்காரர்களிடம் இருந்தே இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு உ.பி. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக, வன்முறையில் ஈடுபட்டவர்களின் முகவரிக்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.