பதட்டம் இல்லை, வம்புகள் இல்லை, பின்தொடர வேண்டிய அவசியம் இல்லை, காரிடரை சுற்றிச் சுற்றி வர வேண்டியதில்லை. பணம் செலுத்திய சில மணி நேரங்களிலேயே அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கடிதம் கிடைத்து விட்டது என்று மத்திய அரசை வியந்து பாராட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 5ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தது. 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போன அலைக்கற்றைகளை, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி நிறுவனம் ஆகியவை ஏலம் எடுத்திருக்கின்றன. இதில், அதானி நிறுவனம் தவிர, மற்றவை பொதுப் பயன்பாட்டுக்கானது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 88,000 கோடி ரூபாய்க்கும், ஏர்டெல் நிறுவனம் 43,000 கோடி ரூபாய்க்கும், வோடபோன் 18,786 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்திருக்கின்றன. இவ்வாறு ஏலம் எடுத்த நிறுவனங்கள் முன்பணம் செலுத்தி வருகின்றன. மீதி தொகையை 20 வருடாந்திர தவணைகளாக செலுத்தலாம். அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ 7,864 கோடி ரூபாயும், ஏர்டெல் நிறுவனம் 4 ஆண்டுகால தவணையான 8,312 கோடி ரூபாயும், வோடபோன் நிறுவனம் 1,679 கோடி ரூபாயும், அதானி நிறுவனம் 18.94 கோடி ரூபாயும் முன்பணமாக செலுத்தி இருக்கின்றன. இதன் மூலம் தொலைத்தொடர்புத் துறைக்கு 17,876 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
இந்த விவகாரத்தில்தான் மத்திய அரசை ஏர்டெல் தலைவர் பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஏர்டெல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் கட்டணமாக 8,312 கோடி ரூபாயை செலுத்தியது. பணம் செலுத்திய சில மணி நேரங்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட அலைவரிசைகளுக்கான ஒதுக்கீடு கடிதத்தை தொலைத்தொடர்புத் துறை வழங்கி விட்டது. உறுதியளித்தபடி, ஸ்பெக்ட்ரத்துடன் இ பேண்ட் ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது. இதில், எந்த பதட்டமும் இல்லை, பின்தொடர வேண்டிய அவசியல் இல்லை, காரிடாரில் யாரையும் சுற்றிச் சுற்றி வர வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் சுலபத் தொழில் செய்யும் முயற்சியின் சாதனை. மேலும், தொலைத்தொடர்புத் துறையுடனான எனது 30 ஆண்டுகால நேரடி அனுபவத்தில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. தொழில் நடத்துவது என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். தலைமையில் இருப்பவர்களும், டெலிகாம் தலைமையும் சரியாக வேலை செய்கிறார்கள். என்னவொரு மாற்றம்? இந்த மாற்றம்தான் இந்தியாவை புரட்டிப் போடவிருக்கிறது. இந்த மாற்றம் ஒரு வளர்ச்சியடைந்த தேசமாக இருக்க வேண்டும் என்ற கனவுகளுக்கு சக்தியளிக்க கூடியது” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.