யோவ்… போய்யா அங்கிட்டு… அமைச்சர் பொன்முடி அடாவடி!

யோவ்… போய்யா அங்கிட்டு… அமைச்சர் பொன்முடி அடாவடி!

Share it if you like it

விருது வழங்கும் விழாவில் ஒரு பேராசிரியரை யோவ்… போய்யா… வாய்யா… என்று தி.மு.க. அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது கடும் சர்ச்சையையும், விமர்சனத்தையும் கிளப்பி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அக்கட்சியினரின் அராஜகம் அதிகரித்திருப்பது அனைவரும் அறிந்ததே. அரசு ஊழியர்கள், அதிகாரிகள், போலீஸார் என அனைத்துத் தரப்பினரிடமும் தங்களது அடாவடித்தனத்தைக் காட்டி வருகின்றனர். அதேபோல, தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களோ, உயர் அதிகாரிகள் முதல் பேராசிரியர்கள்வரை அனைத்து தரப்பினரிடமும் அநாகரிகமாகவும், அடாவடியாகவும் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இந்த சூழலில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பேராசிரியர் ஒருவரை யோவ்… போய்யா… வாய்யா… என்று ஒருமையில் திட்டி இருக்கும் விவகாரம் பெரும் சர்ச்சையையும், விமர்சனத்தையும் கிளப்பி இருக்கிறது.

மதராஸ் நூலகச் சங்கம் சார்பில், சிறந்த நூலகர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவகர்களுக்கான விருது வழங்கும் விழா, மதராஸ் நூலக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நூலகத் தந்தை சீர்காழி ராமாமிருதம் அரங்கநாதனின் 130-வது பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரிலுள்ள தமிழ்நாடு உடற்கல்வியில் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக அரங்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அமைச்சர் விருதுகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, விருது பெற்றவர்களும், கூட்டத்தில் பங்கேற்ற பலரும் எழுந்து, கலைந்து செல்லத் தொடங்கினார்கள்.

இதைப் பார்த்ததும் அமைச்சர் பொன்முடி படு டென்ஷனாகி விட்டார். இதனால், விருது வழங்குவதில் கவனம் செலுத்தாமல், அரங்க வாயிலைப் பார்த்து வெளியே செல்பவர்களை திட்டிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் மதராஸ் நூலகத்தின் தலைவரும் பேராசிரியருமான நித்யானந்தம், பேராசிரியை ஒருவரை அமைச்சரிடம் அறிமுகப்படுத்துவதற்காக அழைத்துச் சென்றார். அமைச்சருக்கு வந்ததே கோவம், யோவ்… கூட்டிக்கிட்டு போய்யா அங்கிட்டு… என்று பேராசிரியர் நித்யானந்தம் மீது எரிந்து விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த பேராசிரியர் நித்யானந்தம், அந்த பேராசிரியையை அழைத்துக் கொண்டு சென்றவிட்டார். மேலும், இச்சம்பவத்தால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில், பேராசிரியர் நித்யானந்தத்துக்கு பெருத்த அவமானமாகிப் போய்விட்டது. இதனால், வேதனையில் அவர் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமைச்சர் பொன்முடியைப் பொறுத்தவரை, கட்சிக்காரர்கள் முதல் அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரிமுமே எரிந்து விழுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில்கூட, மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார் என்பதற்காக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். அதேபோல, சட்டமன்றத்தில் பொன்முடி பேசும்போது, குறுக்கிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரை யோவ்… சும்மா உட்காருய்யா என்று ஒருமையில் பேசியது குறிப்பிடத்தக்கது. இவர்தான் இப்படி என்றால், அமைச்சர் கே.என்.நேரு, துரைமுருகன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலரும் பொதுவெளியில் பத்திரிகையாளர்களை மிரட்டி வருகிறார்கள்.


Share it if you like it