அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக சயீப் அல் அதீல் செயல்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன், அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தியவன். ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த இவனை, தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியது. இதை தாலிபான்கள் நிராகரித்ததால், அமெரிக்கா ராணுவத்தால் அந்நாட்டை விட்டே தாலிபான்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இதன் பிறகு, பாகிஸ்தானின் ஜலாலாபாத் அருகேயுள்ள அபோட்டாபாதில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒசாமா பின்லேடனை, அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை கமாண்டோக்கள் 2011-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர்.
இதன் பிறகு, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக அய்மான் அல் ஜவாஹிரி செயல்பட்டு வந்தான். இவனையும், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தி கொலை செய்தது. இதன் பின்னர், இந்த அமைப்பின் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்த சூழலில்தான், பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய சயீப் அல் அதீல், அல்கொய்தா அமைப்பின் அறிவிக்கப்படாத தலைவராக செயல்பட்டு வருவதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதைத்தான் தற்போது அமெரிக்கா வெளியுறவுத்துறை உறுத்திப்படுத்தி இருக்கிறது.
சயீப் அல் அதில், மேற்காசிய நாடான எகிப்து ராணுவத்தில் சிறப்பு அதிரடிப் படை அதிகாரியாக பணியாற்றியவன். 1991-ம் ஆண்டு அல்கொய்தா அமைப்பில் இணைந்திருக்கிறான். இவன், வெடிகுண்டுகள் தயாரிப்பதில் எக்ஸ்பர்ட் என்கிறார்கள். மேலும், அல்கொய்தா அமைப்பின் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு இவன்தான் மூளையாக செயல்பட்டான் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் ஏற்கெனவே, இவனது தலைக்கு பரிசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவனைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 82 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
காரணம், 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் தகர்த்த பயங்கரவாதிகளுக்கு இவன்தான் பயிற்சி அளித்தான் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. தற்போது சயீப் அல் அதீல் ஈரானில் இருப்பது தெரியவந்திருக்கிறது. எனினும், இவனைப் பற்றிய தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியாது என்கிறார்கள். எனினும், அல்கொய்தா அமைப்பின் தலைவராக சயீல் அல் அதீல் முறையாக அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.