திவாலனது பாகிஸ்தான்: பாதுகாப்பு அமைச்சர் ‘பகீர்’!

திவாலனது பாகிஸ்தான்: பாதுகாப்பு அமைச்சர் ‘பகீர்’!

Share it if you like it

பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் இல்லை. ஏற்கெனவே திவாலாகி விட்டது என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. காரணம், அந்நாட்டில் நிலவி வரும் பயங்கரவாதம்தான். இதனிடையே, கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பரவியது. இதன் காரணமாக, உலக நாடுகள் பலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. குறிப்பாக, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நமது அண்டை நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டன. இதனால், கடந்தாண்டு இலங்கை நாடு திவாலானது. விலை வாசி உயர்வால் ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள், அதிபர் மாளிகை உட்பட அமைச்சர்களின் வீடுகளையும் சூறையாடினர்.

அதேபோல, பாகிஸ்தானும் கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளமும் பாகிஸ்தானை புரட்டிப்போட்டது. இதனால், அந்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டுகிறது. இதன் காரணமாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இதன் பிறகு, பிரதமராக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப், இம்ரான் கான் அரசை குறைசொல்வதிலேயே குறியாக இருந்தாரே தவிர, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால், அந்நாட்டில் பால் 250 ரூபாய்க்கும், பெட்ரோல் 275 ரூபாய்க்கும் கடுமையாக விலை உயர்ந்திருக்கிறது.

மேலும், அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் அல்லாடி வருகிறார்கள். ஒருவேளை உணவுக்காக மக்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறு. கோதுமை மூட்டை 2,500 ரூபாய்க்கு விற்கப்படுவதால், ஏழை, எளிய மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனால், அரசு வழங்கும் கோதுமைக்காக அடித்துக் கொள்கிறார்கள். இதனால், உயிரிழப்புகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் இருப்பதாக மக்கள் பேசி வருகிறார்கள். ஆனால், பாகிஸ்தான் ஏற்கெனவே திவாலாகி விட்டது என்று கூறி அந்நாட்டு மக்களுக்கு பீதியை கிளப்பி இருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் க்வாஜா ஆசிப். இவர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், “நாம் திவாலான நாட்டில் வசிப்பவர்கள். பாகிஸ்தான் திவால் நிலையில் உள்ளதாகவும், பொருளாதாரம் காலியாகி வருவதாகவும் மக்கள் கூறுகிறார்கள். ஆனால், அதெல்லாம் ஏற்கெனவே நடந்துவிட்டது என்றே நான் சொல்லுவேன். இனி மக்கள் அவரவர்கள் சொந்தக்காலில்தான் நிற்க வேண்டும். அப்போது தான் தப்பிப் பிழைக்க முடியும். நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு, பாகிஸ்தானில் மீண்டும் அமைதியின்மை ஏற்படக் காரணமாக இருந்ததே முந்தைய இம்ரான் கான் அரசு தான். இவர்கள் செய்த காரியங்களால் நாடே திவாலிவிட்டது.

இம்ரான் கானின் இந்த காரியத்தால்தான், பாகிஸ்தானின் தலைவிதியாக பயங்கரவாதம் மாறியிருக்கிறது. இதை சரி செய்ய வாய்ப்புகள் இருந்தபோது, அவர்கள் கோட்டை விட்டு விட்டனர். இப்போது நாங்கள் பிரச்னைகளைத் தீர்த்து வருகிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியிருக்கிறார். அதேசமயம், சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் நிதியுதவி கேட்டதற்கு, அக்கோரிக்கையை நிராகரித்து விட்டதோடு, மின் கட்டணம் மற்றும் வரிகளை உயர்த்துமாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, பாகிஸ்தான் திவாலாகி விட்டது என்பதை அந்நாட்டு அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுதான் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it