அமெரிக்க வான் வெளியில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம், அந்நாட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் வான் வெளியில் கடந்த வாரம் பலூன் ஒன்று பறந்தது. சுமார் 3 பேருந்துகள் அளவுக்கு பெரிதாக இருந்த அந்த பலூன் சீனாவால் அனுப்பப்பட்ட உளவு பலூன் என்று அமெரிக்கா சந்தேகித்தது. இதனிடையே, மற்றொரு பலூனும் அமெரிக்காவில் தென்பட்டது. இதையடுத்து, அந்த பலூன் அமெரிக்கா விமானப்படை விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியான அட்லாண்டிக் கடலில் விழுந்த அந்த பலூனை அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் கைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், அமெரிக்க வான்வெளியில் மற்றொரு மர்ம பொருள் ஒன்று பறந்திருக்கிறது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் மீது பறந்த அந்த மர்ம பொருளை அந்நாட்டு ராணுவம் ஜெட் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. அலாஸ்காவின் வடகிழக்கு பகுதியில் பூமியிலிருந்து 40,000 அடி உயரத்தில் இந்த மர்மப் பொருள் பறந்து கொண்டிருந்தது. மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் அது பறந்தது. அலாஸ்கா கடலிலிருந்து வடமுனை நோக்கி அது பறந்து கொண்டிருந்தபோது, சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “அந்த மர்ம பொருள் எங்கிருந்து வந்தது. அதன் நோக்கம் என்ன எல்லாம் எங்களுக்கு இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், 40,000 அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பது விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் என்பதால், அதிபர் ஜோ பைடன் உத்தவின் பேரில் அதனை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க வான்வெளியில் பறந்த சீன உளவு பலூனைவிட இது அளவில் சிறியதுதான். இது ஒரு காரின் அளவில்தான் இருந்தது. இது அரசுக்குச் சொந்தமானதா அல்லது ஏதேனும் கார்ப்பரேட் நிறுவனத்துக்குச் சொந்தமானதா? அதன் நோக்கம்தான் என்ன என்பது இன்னும் உறுதியாகவில்லை” என்றார்.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித்தொடர்பாளர் ப்ரிகேடியர் ஜெனரல் பேட் ரைடர் கூறுகையில், “F-22 ரேப்டர் ரக ஜெட் கொண்டு AIM-9X ஏவுகணையை ஏவி அந்த மர்மப் பொருளை வீழ்த்தினோம். முன்னதாக, சீன உளவு பலூனை வீழ்த்தவும் இதே ஜெட் விமானமும், ஏவுகணையும் தான் பயன்படுத்தப்பட்டது” என்றார். வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் வடக்கு அலாஸ்காவில் கனடா நாட்டு எல்லையை ஒட்டி உறைந்த நீர் நிலை மீது விழுந்தது. இதனால் வீழ்ந்த பாகங்களை மீட்பது எங்களுக்கு எளிதாகியுள்ளது என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.