பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் தீர்ந்து விட்டதாகவும், பலரும் டிக்கெட் கேட்டு தங்களிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டணி அல்பனீஸ் ஆகியோர் மோடியிடமே கூறியிருக்கிறார்கள்.
பாரத பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகளில் 4 நாள் பயணம் நிறைவடைந்த நிலையில், நாளை ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு சிட்னியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் மோடி உரையாடுகிறார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் அழைத்ததின் பேரில், பிரதமர் மோடி அங்கு செல்கிறார். வெள்ளை மாளிகையில் மோடிக்கு அரசு விருந்து அளிக்கப்படவிருக்கிறது. இந்த சூழலில், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின்போதுதான், பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ள நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்கள் தீர்ந்து விட்டதாகவும், பல முக்கியப் புள்ளிகள் தங்களை தொடர்பு கொண்டு டிக்கெட் கேட்டு நச்சரிப்பதாகவும் பைடனும், ஆன்டணி அல்பனீஸும் கூறியிருக்கிறார்கள்.
ஆன்டணி அல்பனீஸ் கூறுகையில், “சிட்னியில் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சிக்கான டிக்கெட் கேட்டு பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், என்னால் அவர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அந்த அரங்கில் 20,000 பேர் வரை அமரலாம். ஆனால், எனக்கு இன்னும் டிக்கெட்டுகளுக்கான கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, ஜோ பைடனும், “நான் உங்கள் ஆட்டோகிராப்பை வாங்கி கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள், எனக்கு உண்மையான பிரச்னையை ஏற்படுத்துகிறீர்கள். வாஷிங்டனில் அடுத்த மாதம் உங்களுக்கு இரவு விருந்து அளிக்க உள்ளோம். நாடு முழுவதும் எல்லோரும் வர விரும்புகிறார்கள். ஆனால், டிக்கெட் தீர்ந்து விட்டது. நான் விளையாடுவதாக நினைக்கிறீர்களா? என் குழுவிடம் கேளுங்கள். எனக்கு தொலைபேசி வருகிறது. நான் இதுவரை கேள்விப்படாத நபர்களிடமிருந்து அழைப்புகள் வருகிறது. சினிமா நட்சத்திரங்கள் முதல் உறவினர்கள் வரை அனைவரும் அழைத்து டிக்கெட் கேட்கிறார்கள். நீங்கள் மிகவும் பிரபலமானவர்” என்று கூறியிருக்கிறார்.
ஆக, போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்கிற கதையாக இந்தியாவின் பல மாநிலங்களில் பிரதமர் மோடியை பலரும் இகழ்ந்து வரும் நிலையில், உலக அரங்கில் மோடியின் செல்வாக்கு கூடிக்கொண்டே செல்கிறது.