திக் திக் திக்… அமேசான் காட்டில் 40 நாட்கள்: உலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தைகள்!

திக் திக் திக்… அமேசான் காட்டில் 40 நாட்கள்: உலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தைகள்!

Share it if you like it

அமேசான் வனப்பகுதியில் சிக்கி கொண்ட குழந்தைகள் 40 நாட்களுக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

கடந்த மே 1 ஆம் தேதி ஒற்றை இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று ஆறு பயணிகள் மற்றும் ஒரு பைலட்டுடன் கொலம்பியாவிலிருந்து அமேசான் காட்டின் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பைலட், பூர்வக்குடி இனத் தலைவர் மற்றும் ஒரு பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விமானத்தின் பாகங்கள் கிடந்த பகுதியில் 3 சடலங்கள் கைப்பற்றப்பட்டன. எனினும், விமானத்தில் இருந்த மற்ற 4 பேரின் நிலை என்னவென்று அறிய முடியவில்லை. இதையடுத்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. விபத்து நடந்த பகுதியிலிருந்து பல கிலோ மீட்டர் தள்ளி குழந்தைகளின் ஆடைகள், பால் பாட்டில் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த நான்கு பேரும் குழந்தைகளாக இருக்க கூடும் என கணிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கொலம்பிய நாட்டு ராணுவம் தேடுதல் வேட்டையை இன்னும் தீவிரப்படுத்தியது.

அமேசான் காடுகள் அடர்ந்த வனப்பகுதி என்பதால் பூர்வக்குடிகளின் துணையை அந்நாட்டு ராணுவம் நாடியது. அவர்களும் உதவிக்கரம் நீட்டினர். இதையடுத்து, 40 நாட்களுக்குப் பின்னர் 3 சிறுவர்களும் ஒரு கைக்குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியில் ஏராளமான தன்னார்வலர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்த கொலம்பிய தேசமே தற்போது விழா கோலம் பூண்டுள்ளது.

குழந்தைகள் நான்கு பேரும் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து கொலம்பிய நாட்டு அதிபர் கஸ்டாவோ பெட்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

“கொலம்பிய காடுகளில் கடந்த 40 நாட்களுக்கு முன்னர் மாயமான குழந்தைகள் 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தேசத்திற்கான மகிழ்ச்சி செய்தி. இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட பூர்வக்குடிகள் மற்றும் ராணுவத்தினரின் புகைப்படங்களையும் அதிபர் பெட்ரோ ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மீட்கப்பட்ட 4 குழந்தைகளும் அந்தத் தருணத்தில் மிகவும் சோர்ந்துபோய், அச்சத்துடன் காணப்பட்டனர் என்று கூறிய அதிபர், இருப்பினும் அந்த 4 குழந்தைகளும் மனிதர்கள் எத்தகைய நெருக்கடிகளுக்கு இடையேயும் வாழ முடியும் என்பதற்கான முன் உதாரணமாக, அடையாளமாக இருப்பார்கள். அவர்களின் கதை வரலாறாகும் எனத் தெரிவித்துள்ளார்.


Share it if you like it