உதயநிதியின் அருகே சென்று கொண்டிருந்த பெண்ணை, அமைச்சர் பொன்முடிய பிடித்துத் தள்ளிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பெண்கள் இலவசமாக அரசு நகரப் பேருந்துகளில் செல்வதை, ஓசி பஸ்லதானே வந்தீங்க என்று கேட்டது முதல், ஏம்மா நீ எஸ்.சி.தானே என்று ஜாதியைச் சொல்லி காட்டியது வரை, பொன்முடியின் வாய்க்கொழுப்பு எல்லை மீறியது. அதேபோல, கட்சி நிர்வாகிகளிடம் மனுஷன் காண்டாகித்தான் காணப்படுகிறாராம். இதை மெய்ப்பிக்கும் வகையில், பூத் கமிட்டி பட்டியலை கட்சி நிர்வாகி முகத்தில் வீசியடித்த வீடியோ வெளியானது. இந்த சூழலில்தான், அமைச்சர் உதயநிதியுடன் சென்ற பெண்ணை தள்ளிப்போ என்று கையை பிடித்து தள்ளிவிட்ட சம்பவம் அரங்கேறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு திறன் போட்டிகள் தொடக்க விழா நடந்தது. இதில், அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் உதயநிதி, திறன் மேம்பாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக முன்னால் சென்று கொண்டிருந்தார். அப்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பெண், உதயநிதியின் அருகில் ஒட்டியபடி சென்று கொண்டிருந்தார். இதை கவனித்த அமைச்சர் பொன்முடி, ஓரமாப் போ என்பது போல தனது கைகளால் அப்பெண்ணை பிடித்து ஓரமாக தள்ளி விட்டார். இச்சம்பவம்தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.