பல ஆண்டுகளாக ஆந்திர மாநில வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழர்கள் கைது என்ற செய்திகள் தொடர்கிறது.சமீபத்தில் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதும் இரு வேறு பகுதிகளில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியானது. தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரமும் பேருந்து நிறுத்தம் ரயில் நிலையம் என்று பொது இடங்களில் எல்லாம் உணவு தங்குமிடம் கூடிய வேலை வாய்ப்பு உடனடி ஆட்கள் தேவை என்று பதாகைகள் இருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. ஆனால் மறுபக்கம் வேலைவாய்ப்பு வருமானம் இல்லை என்று கூக்குரல்.
தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தொழிற் கூடங்களும் அன்றாட சேவை பணிகளும் வட மாநில தொழிலாளர்களை மட்டுமே நம்பி இயங்குகிறது. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காக இங்கிருந்து ஆந்திர மாநிலம் போய் மரம் வெட்டி கைதாகும் தமிழர்கள் என்று செய்தி. இந்த நிலையில் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் போய் பாதுகாக்கப்பட்ட அரிய வகை மரமான செம்மரக்கட்டைகளை இரவோடு இரவாக வெட்டுவதும் கடத்துவதுமான குற்றச் செயலுக்கு இங்கிருந்து பலரும் போய் அதில் 25 பேர் அங்கு கைதாகி இருக்கும் செய்தி சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல.
ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கும் கீழான கூலிக்காக வட மாநில தொழிலாளர்கள் இங்கு இரவு பகலாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் வந்து தான் எங்கள் வேலை வாய்ப்புகள் எல்லாம் பறிப்போய்விட்டது. எங்களுக்கு வேலை இல்லை என்று சொல்பவர்கள் இங்கு கிடைக்கும் எந்த வேலையும் செய்யவோ உடல் உழைப்பை கொடுக்கவோ தயாராக இல்லை. அதே நேரத்தில் அதிகபட்சமாக ஒரு வாரம் வேலை செய்தால் பல ஆயிரங்கள் கிடைத்துவிடும் என்ற ஆசைக்கு மயங்கி கடத்தல் காரர்களுக்கு துணை போவதுடன் அண்டை மாநிலத்தில் போய் வனப்பகுதிகளில் இருக்கும் மரங்களை வெட்டி அவற்றை கடத்துவதற்கும் உதவி செய்து அவ்வப்போது ஆந்திர காவல்துறையிடம் சிக்குகிறார்கள்.
இவர்களை இங்கிருந்து அழைத்துச் சென்ற ஏஜெண்டுகள் சில காலம் தலைமுறைவாகி விடுவார்கள். இவர்களை அந்த ஏஜெண்டுகளுக்கு அறிமுகம் செய்து அனுப்பி வைத்த உள்ளூர் நபர்கள் இருக்கும் இடமே தெரியாது. இங்கிருக்கும் தமிழ் அமைப்புகள் பாதுகாவலர்கள் இப்போது கள்ள மவுனம் காப்பார்கள். ஆனால் சட்டம் இவர்களின் மீது தனது கடமையை செய்யும் போது சொல்லி வைத்தார் போல் ஒரு கூட்டம் வந்து ஐயோ தமிழ் – தமிழர் தமிழனுக்கு பாதுகாப்பில்லை என்று நாலாந்தர அரசியலை செய்வார்கள். இது அனைத்துமே திட்டமிட்ட சதியா.?
உங்களுக்கு ஒரு நிகழ்வை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2015 ம் ஆண்டு மே – ஜூன் மாத வாக்கில் ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்துவதற்காக பல நூறு பேர் தமிழகத்தில் இருந்து ஆந்திரா போய் திருப்பதி அடுத்த சந்திரகிரி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்திய போது வனத்துறை மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் என்கவுண்டர் என்னும் சம்பவம் அரங்கேறி 20க்கும் மேற்பட்டவர்கள் வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூர் மலைப்பகுதியில் இருந்து பெரும்பாலானவர்கள் ஆந்திர வனப் பகுதிக்கு ஏஜென்ட்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதும் அவர்களை நம்பி போனவர்கள் கொல்லப்பட்டு 20 க்கும் மேற்பட்டோர் பிணமாக திரும்பியதும் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இங்கிருந்து போன நபர்கள் வனத்துறை பாதுகாப்பு சட்டம் பாதுகாக்கப்பட்ட அரிய வகை மரமான செம்மரத்தை வெட்டுதல் உள்ளிட்ட தேச விரோத செயல்களை செய்ததும் அதற்கு இங்குள்ள பலரும் துணையாக இருந்ததும் ஒட்டுமொத்தமாக மறைக்கப்பட்டு ஆந்திர காவல்துறையால் தமிழர்கள் என்கவுண்டர் என்ற ஒற்றை வாசகம் மட்டும் முன்னிறுத்தப்பட்டது. இந்த உயிரிழப்புகளை முன் வைத்து அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் – அவரை எதிர்த்து எதுவும் கேட்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்ததாக அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் தமிழர் விரோதியாக சித்தரித்து பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார்கள்.
இங்குள்ள ஊடகங்கள் தொடங்கி அரசியல் கட்சிகள் – அமைப்புகள் வரை ஒருவர் கூட மலை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு செம்மரத்தை அடையாளம் தெரியாதா? அந்த செம்மரத்தை வெட்டுவது சட்டப்படி குற்றம் என்பதும் அதை வெட்டி கடத்துவது தேச துரோக குற்றம் என்பதும் அவர்களுக்கு தெரியாதா? தெரிந்து இவர்கள் ஏன் அங்கு போனார்கள் ? இந்த வேலையை செய்ய ஏன் ஒப்புக் கொண்டார்கள் ? இல்லையெனில் இந்த விஷயத்தில் அப்பாவி மக்கள் ஏதாவது கட்டாயம் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்களா? இதன் பின்னணி என்ன ? இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் ? என்று யாரும் பேசவே இல்லை.
இதை எல்லாம் விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு பதிலாக தமிழகத்தில் இருக்கும் அதிமுக அரசு ஆந்திராவில் இருக்கும் தெலுங்கு தேச கட்சி மத்தியில் ஆளும் பாஜக அரசு எல்லாமே தமிழர்களை கொன்று குவிக்கிறது. தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்று விஷம பிரச்சாரங்களை செய்து அப்பாவி மக்களை மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராகவும் இவர்களது பிரிவினைவாத சதியான தனி தமிழ்நாடு என்ற சித்தாந்தத்திற்கு ஆதரவாகவும் கருத்தியல் உருவாக்க பெரும் பிரயத்தனம் செய்தார்கள்.
ஆனால் இன்று வரை கொல்லப்பட்ட தமிழர்களை இங்கிருந்து அழைத்துச் சென்ற ஏஜென்ட் யார்? என்பதை அவர்களுக்கு துணையாக இருந்த உள்ளூர் நபர்கள் யார்? என்பதெல்லாம் வெளிவரவே இல்லை. ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு திருப்பதி – காளஹஸ்தி உள்ளிட்ட ஆன்மீக திருத்தலங்களுக்கு தமிழகத்தின் பதிவு எண் கொண்ட வாகனங்கள் போகும்போது காவல்துறை வழக்கமாக செய்யும் பாதுகாப்பு சோதனைகள் கேள்விகளை கூட பெரும் செய்தியாக்கி தமிழகத்தில் இருந்து போகும் ஆன்மீக யாத்ரீகர்களுக்கு கூட செம்மர கடத்தல் காரர்கள் என்ற சந்தேக கண்ணோடு ஆந்திரா மாநில காவல்துறையும் வனத்துறையும் அவமதிக்கிறது. எனவே ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கோவில்களுக்கு போவதை புறக்கணியுங்கள் என்ற விஷம பிரச்சாரத்தையும் முன்னெடுத்தார்கள்.
கர்நாடக மாநிலத்தோடு காவேரி நதிநீர் பங்கீடு பிரச்சனையை மையமாக வைத்து கன்னடன் – தமிழன் என்று பிரிவினையை வளர்த்து விட்டார்கள். கேரளாவோடு இருக்கும் முல்லை – பெரியாறு நதி நீர் பிரச்சனை முன்வைத்து மலையாளி – தமிழன் என்று பிரிவினையை வளர்த்து விட்டார்கள். ஆந்திர மாநிலத்தோடு பாலாறு நதிநீர் பங்கீடு பிரச்சனை இருந்தால் கூட அது இவர்கள் அரசியல் செய்வதற்கு பெரிய அளவில் கை கொடுக்காத காரணத்தால் அடுத்த சிக்கலாக இருக்கும் செம்மர கடத்தல் விவகாரத்தை இவர்களின் பிரிவினைவாத அரசியலுக்காக பகடையாக பயன்படுத்துகிறார்கள்.
செம்மரம் என்பது கதிர் வீச்சையும் அபாயகரமான வேதியியல் பயன்பாடுகளின் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க வல்ல அபூர்வமான பாதுகாப்பு கவசம் என்பதும் அந்த செம்மரம் நம் நாட்டில் குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே வளர்வதும் அது பாதுகாக்கப்பட்ட அரிதிலும் அரிதான அபூர்வ வகை மரமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதும் தெரிந்து கூட அந்த மரங்கள் அவற்றின் அபூர்வமான மருத்துவ தன்மைக்காக வெளிநாடுகளுக்கு தேவைப்படும் காரணத்தால் பணத்திற்கு ஆசைப்பட்டும் இங்கு குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்ற கெடுமதியோடும் தொடர்ச்சியாக செம்மர கடத்தலுக்கு தமிழகத்தில் பெரும் ஆதரவும் பங்களிப்பும் இருந்து வருகிறது.
இவர்களின் நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். தமிழகத்தில் எந்த ஒரு தொழிற்சாலையும் உற்பத்தி சார்ந்த தொழில் வியாபாரமும் உருப்படியாக நடக்க விடக்கூடாது. அதே நேரத்தில் வேலை இல்லை . வருமானம் இல்லை என்று எப்போதும் ஒரு கூட்டத்தை புலம்ப வைத்து அவர்களை பகடையாக்கி இதுபோன்ற சமூக விரோத தேச விரோத குற்றங்களை நிகழ்த்துவது. சட்டம் தனது கடமையை செய்ய முயலும் போது இவர்களையே பகடையாக்கி தமிழ் – தமிழர் என்ற மொழி இனவாத பிரிவினை அரசியலை தூபம் போட்டு வளர்ப்பது மட்டுமே.
இதுவரையில் இந்த செம்மரக் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணை கைதிகளாக பல ஆயிரம் பேர் ஆந்திர மாநில சிறைகளில் இருப்பதும் அதில் சில ஆயிரம் பேர் தமிழகத்தில் இருந்து போனவர்கள் என்பதும் அவ்வப்போது செய்திகளாக அடிபடுகிறது. ஆனால் அவர்களை அழைத்துச் சென்ற ஏஜெண்டுகள் பிரச்சனை என்று வந்தவுடன் அவர்களை அப்படியே கைவிட்டு அடுத்து வேறொரு கூட்டத்தை தேடிப் பிடித்து கூட்டிச் செல்ல தயாராவதை எந்த மாநில அரசும் தடுக்கவில்லை. இவர்களின் இந்த கொடுஞ்செயல்கள் எல்லாம் மறைக்கப்பட்டு பணத்திற்காக வேறொரு மாநிலத்தில் போய் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடும் குற்றப் பின்னணியையும் மறைத்து ஏதோ ஆந்திர மாநில காவல் துறையும் வனத்துறையும் தமிழர்களை கொன்று குவிப்பதற்காகவே பணியமர்த்தப்பட்டது போல ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார்கள்.
இந்த செம்மரக்கட்டைகள் வெட்டி எடுக்கவும் கடத்துவதற்கும் இங்கிருந்து போகும் நபர்கள் யார்? . அவர்களை இங்கிருந்து அழைத்துச் செல்லும் ஏஜென்ட்கள். யார்? அவர்களுக்கு உதவும் உள்ளூர் அமைப்புகள்.எது ? ஏதேனும் உயிர் பலிகள் அசம்பாவிதம் நிகழும் பட்சத்தில் அதையெல்லாம் முன்வைத்து தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை. தமிழர்களை பாதுகாக்க நமக்கு என்று ஒரு அரசாங்கம் வேண்டும். நமக்கென்று ஒரு தனிநாடு வேண்டும் என்று பேசும் நபர்கள். அமைப்புகள் அவர்களின் பின்னணி என்ன? இவர்கள் அனைவரையும் பின் இருந்து இணைக்கும் பிரிவினைவாத கரங்கள் . அவர்களின் பின்னணியில் இருக்கும் அந்நிய சக்திகள் யார்? என்று இந்த பெரும் சதிகளை கண்டறிந்து இதை வேரோடு அறுத்து எறிந்தால் மட்டுமே தமிழகத்தில் தெரிந்தே குற்றம் இழைக்கும் மனப்போக்கும் அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை சீர்குலைத்து அதன் மூலம் தென் மாநிலங்களின் பிரிவினைவாத கோரிக்கையை கட்டமைக்கவும் மத்திய அரசுக்கும் தேசிய இறையாண்மைக்கும் ஏதாவது ஒரு வகையில் அவதூறு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று இவர்களின் திட்டமிட்ட சதிகள் முடிவுக்கு வரும்.
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் கொல்லப்பட்ட வர்களை முன் நிறுத்தி மத்திய மாநில அரசுகள் காவல் துறை மற்றும் வனத்துறைக்கு எதிராக போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அரசு மற்றும் அரசு எந்திரங்கள் மீதான வெறுப்பை விஷம பிரச்சாரம் செய்பவர்கள் இங்கு ஏராளம் உண்டு. ஆனால் அதே செம்மரக் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாகவும் வழக்கு முடிவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தண்டணை கைதிகளாகவும் ஆந்திர மாநில சிறைகளில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பற்றி யாரும் பேச மாட்டார்கள். அவர்கள் மீதான வழக்கு விசாரணை அல்லது நீதிமன்ற விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தார் யாராவது ஏதாவது உதவி கேட்டாலும் செய்ய மாட்டார்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணை நடைமுறைக்கு குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக எந்த ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் கூட செய்ய மாட்டார்கள். ஆந்திர மாநில அரசு – காவல் துறை – வனத்துறை கோரும் ஒத்துழைப்பு கூட கிடைக்காது.
ஆனால் விசாரணை கைதியாகவும் தண்டனை கைதியாகவும் இருப்பவர்கள் யாராவது சிறையில் இருக்கும் போது உயிரிழக்க நேர்ந்தால் கூட்டமாக களமிறங்குவார்கள். உண்மையில் அவர் நீண்ட கால நோய் தாக்கம் அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக உயிரிழந்திருந்தால் கூட ஐயோ தமிழனை கொன்றுவிட்டார்கள். தமிழருக்கு பாதுகாப்பு இல்லை. தனி தமிழ் நாடு ஒன்றே தீர்வு என்று பிண அரசியல் களம் பரபரக்கும். உண்மையில் இவர்களுக்கு தமிழர்கள் மீது அன்போ அக்கறையோ கிடையாது. குறைந்த பட்ச நேர்மை நியாயம் மனிதாபிமானம் கூட கிடையாது. இவர்களின் நோக்கம் எல்லாம் திட்டமிட்ட விஷம பிரச்சாரம் – கலவரம் – வன்முறை மூலம் உள்நாட்டு குழப்பம், சட்டம் – ஒழுங்கு , சமூக அமைதியை கெடுத்து மக்கள் – அரசு இடையே கசப்புணர்வை ஏற்படுத்தி பிரிவினை பேசி அதன் மூலம் அந்நியனுக்கு தரகு வேலை பார்த்து சுயலாபம் அடைவது தான் . அதற்கு இவர்களுக்கு தேவை எந்த ஒரு சமூக பொருளாதார அரசியல் பலமோ விழிப்புணர்வு இல்லாத சில அப்பாவிகளின் மரணம் . அதன் மீதான பிண அரசியல் ஆதாயம் மட்டுமே.
இந்த விஷயங்கள் இது தொடர்பான நபர்களை தேசிய பாதுகாப்பு முகமை போல ஏதேனும் ஒரு வலுவான சட்ட அதிகாரம் கொண்ட ஒரு விசாரணை அமைப்பு களம் இறங்கி முழுமையான விசாரணையை மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களையும் இதன் பின்னிருக்கும் சதிகளையும் கண்டறிந்து இந்த நிகழ்வுகள் எல்லாம் வெறும் செம்மரக் கடத்தல் என்ற வகையில் தான் இருக்கிறதா? அல்லது அதையும் கடந்து நக்சலைட்டுகளுடன் தொடர்பு – பயிற்சி என்று பெரிய அளவில் ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா ? என்ற உண்மையும் வெளிக்கொணர முடியும்.