பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நிருபரை புதிய தலைமுறை ஊடகத்தின் நிறுவனர் பாரிவேந்தர் கண்டித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றன. இந்த, சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, புதிய தலைமுறை ஊடக நிருபர் தனது மனம் போன போக்கில் பா.ஜ.க. தலைவரிடம் கேள்வி கேட்டார். இதையடுத்து, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தன்னிடம் உள்ள தி.மு.க.வின் ஊழல் பட்டியலை உங்களது தொலைக்காட்சியில் வெளியிட முடியுமா? என அண்ணாமலை கேட்டார். இதற்கு, அந்த நிருபர் ஆதாரத்தை கொடுத்தால் புதிய தலைமுறையில் ஒரு மணி நேரம் நேரடி ஒலிபரப்பு செய்ய தயார் என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து, இச்சம்பவம் பொதுமக்களிடையே விவாதப் பொருளாக மாறியிருந்தது. இந்நிலையில், புதிய தலைமுறை நிருபர் விடுத்த சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அந்த ஊடகத்தின் நிர்வாகம் அதிரடியாக அறிவித்து இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், புதிய தலைமுறை ஊடகத்தின் நிறுவனர் பாரிவேந்தர் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது ;
நிருபர்களும் சூழ்நிலையை சற்று அனுசரித்து செல்ல வேண்டும். சிறிய வயதில் பெரிய பதவிக்கு வந்துள்ளார். மிகச் சிறந்த அறிவாளி. அவர் இல்லை என்றால் எதிர்க்கட்சியே இல்லாதது போல் மாறியிருக்கும். மிகவும் திறமையானவர், அவரிடம் அனைத்து புள்ளி விவரங்களும் உள்ளது. தமிழ்நாட்டிற்கு தேவையான ஒரு சிறந்த தலைவர் அண்ணாமலை. அவரிடம் கேள்வி கேட்கும் போது நிருபர்கள் பொறுப்புடன் கேள்வி கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.