தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க.வுக்கு சொந்த கட்டிடங்கள் கட்ட அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், வருகைக்கு பின்பு அக்கட்சியின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் கூட பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க.வை வளர்க்கும் பணியில் அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, பா.ஜ.க.விற்கு என்று சொந்த கட்டிடங்களை கட்ட தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், சென்னையை அடுத்து தமிழகத்தின் 3 மாவட்டங்களில் பா.ஜ.க.வின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. மேலும் 10 மாவட்டங்களில் அலுவலகங்கள் வெகுவிரைவில் திறக்கப்பட உள்ளன.
இதற்காக, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். அங்கு, பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். இதில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கிருஷ்ணகிரியில் இருந்தபடியே காணொளி மூலம் மேலும் 9 மாவட்ட அலுவலகங்களை ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.
இப்பட்டியலில் தருமபுரி, திருச்சி, நாமக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.