ஊருக்குள் புகுந்த அரிசிக் கொம்பன் யானை… பொதுமக்களை ஓடஓட விரட்டியதால் பரபரப்பு!

ஊருக்குள் புகுந்த அரிசிக் கொம்பன் யானை… பொதுமக்களை ஓடஓட விரட்டியதால் பரபரப்பு!

Share it if you like it

கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை அரிசிக் கொம்பனை, தமிழக மற்றும் கேரள மாநில வனத்துறையினரும், போலீஸாரும், வருவாய்த் துறையினரு் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கேரள மாநிலம் மூணாறு சின்னக்கல் பகுதியில் அரிசிக் கொம்பன் என்கிற ஒற்றை யானை அட்டகாசம் செய்துவந்தது. இது குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து ரேஷன் கடைகளை குறிவைத்து அரிசி மற்றும் சீனி மூட்டைகளை சுவைத்து வந்தது. இதனால் இதற்கு அரிசிக் கொம்பன் என்கிற பெயர் வந்தது. இதை கேரள வனத்துறையின் கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, 4 கும்கி யானைகளின் உதவியுடன் தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வனச் சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டனர்.

ஆனால், அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த யானை, மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது. இந்த சூழலில், நேற்று இரவு குமுளி ரோஜாப் பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்த அரிசிக் கொம்பன் யானை, கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து, விவசாய பயிர்களை அழித்து அங்கேயே தஞ்சமடைந்தது. இதைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள், வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தமிழக, கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், பணியாளர்களை வெளியேற்றி யானையின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், அரிசிக் கொம்பன் யானை நேற்று காலை 4 மணி அளவில் இடம் பெயர்ந்து, கூடலூர் வழியாக கம்பம் பகுதியை வந்தடைந்தது. குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த அரிசிக் கொம்பன் யானை, ஏகலூத்து சாலை வழியாக நாட்டுக்கள் தெரு மின்சார வாரிய அலுவலக தெரு, நெல்லுகுத்தி, புளியமரம் சாலை பகுதியில் புகுந்து சாலையில் நடந்து சென்றவர்களை விரட்டியது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். பிறகு, பொதுமக்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து கிளம்பிய யானை, மின்சார வாரிய அலுவலகத் தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான புளியமர தோப்பில் தஞ்சமடைந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Share it if you like it