அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், உயிரிழந்த இரு விமானிகளில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் திராங் பகுதியில், வழக்கமான பயிற்சிக்காக இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர், நேற்று காலை 9 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த ஹெலிகாப்டர் காலை 9.15 மணிக்கு மேற்கு போம்திலா அருகேயுள்ள மண்டலா மலைப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, கடைசியாகக் கிடைத்த ஜி.பி.எஸ். சிக்னலை வைத்து ராணுவத்தினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பங்ஜலி பகுதிக்கு அருகே விபத்துக்குள்ளானதாக உள்ளூர் மக்கள் பகல் 12.30 மணியளவில் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பனிமூட்டம் காரணமாக அப்பகுதியில் மீட்பு பணிகள் தாமதமாயின. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்த விமானிகளின் விவரம் தெரியவந்திருக்கிறது. விபத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவர் லெப்டினென்ட் கர்னல் வினய் பானு ரெட்டி. இவர், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். மற்றொரு நபர் மேஜர் ஜெயந்த். இவர், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது உடல் அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூரில் இருந்து ராணுவ விமானம் மூலமாக இன்று இரவு 8 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்களம் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உடல் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.