அஸ்ஸாமில் பஜ்ரங்தள் தொண்டரை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த அனிமுல் ஹக் என்பவனை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டம் பதர்கண்டி துணைப் பிரிவின் லோவரிபுவா பகுதியைச் சேர்ந்தவர் சம்பு கொய்ரி. 10-ம் வகுப்பு மாணவரான இவர், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங்தளத்தில் தன்னார்வத் தொண்டராக இருந்தார். இந்த சூழலில், ஹைலகண்டி மாவட்டத்தில் 3 நாள் பயிற்சி முகாமுக்கு பஜ்ரங்தள் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமில் சம்பு பங்கேற்கச் சென்றிருந்தார். பின்னர், முகாம் முடிந்து கடந்த 8-ம் தேதி ஊர் திரும்பி இருக்கிறார் சம்பு. இரவு 8 மணியளவில் லோவரிபுவா பகுதியில் சம்பு வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அனிமுல் ஹக் என்பவன் சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறான்.
இதில், கழுத்து, முகம், மார்பு, முதுகு, தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த சம்பு, ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சம்புவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சம்பு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சம்பு இறந்த தகவல் அவரது உறவினர்கள் மற்றும் பஜ்ரங்தள் தொண்டர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவியது. இதையடுத்து, பஜ்ரங்தள் தொண்டர்கள் பசாரிச்சேரா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் பலத்த போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க, 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனிடையே, தப்பி ஓடிய அனிமுல் ஹக்கை போலீஸார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் சற்று அமைதி ஏற்பட்டிருக்கிறது.