அதிகாரப் பசி கொண்டவர்களால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்ததாக, காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடி சாடி இருக்கிறார்.
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் பிஹூ திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டு, 14,300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக, 1,123 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதேபோல, நல்பாரி, கோக்ரஜார் மற்றும் நாகோன் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 9 ஆண்டுகளாக நான் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போதெல்லாம், சிலர் மிகவும் கலவரமடைகின்றனர். ஏனெனில், மேற்கண்ட மாநிலங்கள் அவர்களால்தான் வளர்ச்சி அடைந்தது என்று கூறமுடியாது. கடந்த பல தசாப்தங்களாக அவர்களும் நாட்டை ஆண்டதாக கூறிக்கொள்கிறார்கள். அதிகார வேட்கை உள்ளவர்கள் நாட்டை ஆள்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மக்களுக்கு பெறும் தீங்குகளை செய்துவிட்டார்கள்.
நாங்கள் உங்களின் பணியாளர்கள் என்ற உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். அதனால்தான் வடகிழக்கு மாநிலங்கள் எங்களுக்கு வெகு தூரமாக தெரியவில்லை. நாம் எங்கே இருந்தாலும் அனைவரும் சொந்தம் என்ற உணர்வு நிலைத்திருக்கும். இன்று வடகிழக்கு மக்கள் முன்னேறி வந்து தங்களின் வளர்ச்சிக்கான பெயரைத் தாங்களே எடுத்துக்கொள்கின்றனர். வளர்ச்சி என்ற மந்திரத்தின் மூலம் அவர்கள் முன்னேறி வருகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தியுள்ளோம். அதனால்தான் இங்கிருப்பவர்கள் நகரங்களை இணைக்கும் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து பேசுகிறார்கள்” என்றார்.
பின்னர், கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் 75-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு சட்டங்கள் தற்போது தேவையற்றதாக இருக்கிறது. அதனடிப்படையில், சுமார் 2,000 சட்டங்களை ரத்து செய்து, வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கப்பட்டிருக்கிறது” என்றார். பொதுக்கூட்டத்திற்கு பிறகு, திறந்த வாகனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேரணி சென்றார். அப்போது பாஜ..க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்புக் கொடுத்தனர்.