பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு வந்ததோடு, அதை பிற ஆசிரியர்களுக்கும் பரிமாறியதாக தலைமை ஆசிரியையை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
அஸ்ஸாம் மாநிலம் கோல்பரா மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர் டாலிமான் நெஸ்ஸா (56). இவர், கடந்த 14-ம் தேதி மதிய உணவுக்கு மாட்டிறைச்சி கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதை தான் சாப்பிட்டதோடு, பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்கள் சிலருக்கும் பரிமாறி இருக்கிறார். இந்த விவகாரம் அரசல் புரசலாக பள்ளி நிர்வாகத்துக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, பள்ளி நிர்வாகக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தலைமை ஆசிரியை டாலிமான் நெஸ்ஸா மாட்டிறைச்சி கொண்டு வந்ததும், சக ஆசிரியர்களுக்கு பரிமாறியதும் உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, பள்ளி நிர்வாகக் குழு சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியை டாலிமான் நெஸ்ஸாவை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இந்திய தண்டனைச் சட்டம் 153 A (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295 A (மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளைக் கலைக்கும் நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் நெஸ்ஸா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நெஸ்ஸாவின் இத்தகைய செயல் பள்ளியில் பணிபுரியும் ஒரு தரப்பினருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பள்ளியில் பணிபுரியும் இரு சமூகத்தினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்யப்படவில்லை. எனினும், அஸ்ஸாம் பசு பாதுகாப்புச் சட்டம், ஹிந்துக்கள், ஜெயின்கள் மற்றும் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சியை விற்கவும், வாங்கவும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.