ஆதாரம் கேட்ட ஸ்டாலின்; வெளியான வீடியோ: அசிங்கப்பட்ட தி.மு.க.வினர்!

ஆதாரம் கேட்ட ஸ்டாலின்; வெளியான வீடியோ: அசிங்கப்பட்ட தி.மு.க.வினர்!

Share it if you like it

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டுகிறார். எங்கே ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள் என்று இன்று நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், கோவை மாவட்டம் சூலூரில் பட்டாக்கத்தியுடன் ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபடும் வீடியோ வெளியாகி, சட்டம் ஒழுங்கு லட்சணத்தை சந்தி சிரிக்க வைத்திருக்கிறது.

நிகழாண்டுக்கான தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர், கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத் தொடரில் கவர்னருக்கு எதிராக கோஷம், கவர்னருக்கு எதிராக தீர்மானம், கவர்னர் வெளிநடப்பு என பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இந்த சூழலில், இன்று நடந்த கூட்டத் தொடரின்போது, எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டினார். உடனே, முதல்வர் ஸ்டாலின் எழுந்து, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது குறித்த பட்டியலை தயாராக வைத்திருக்கிறேன். தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். அவர் அதற்கான ஆதாரத்தைக் காட்டட்டும் என்று சவால் விட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், இன்று ஒரு வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோ கோவை மாவட்டம் சூலூரில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் பட்டாக்கத்தியுடன் திரியும் 5 இளைஞர்கள், அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் கொள்ளையடிப்பது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேற்கண்ட வீடியோ கடந்த 10-ம் தேதி எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் மேற்கண்ட வீடியோவில் தெள்ளத் தெளிவாக பதிவாகி இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று ஸ்டாலின் சவால் விட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனால், பொதுவெளியில் அசிங்கப்பட்ட நிற்கிறார்கள் தி.மு.க.வினர்.

இது ஒருபுறம் இருக்க, சட்டம் ஒழுங்கை பற்றிப் பேச ஸ்டாலினுக்கு அருகதையே இல்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்களும், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களும். காரணம், ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு தலைநகர் சென்னையில் மட்டும் 94 கொலை சம்பவங்களும், 2022-ம் ஆண்டில் 97 கொலை சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. இதைவிட கொடுமை என்னவென்றால், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் (ஒரே மாதத்தில்) தமிழகம் முழுவதும் 133 கொலை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. தவிர, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. எல்லாவற்றும் மேலாக, நாட்டையே உலுக்கிய கார் குண்டு வெடிப்பு சம்பவம், தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மோசமாக சட்டம் ஒழுங்கை வைத்துக்கொண்டு, ஸ்டாலின் சவால் விடுவது வேடிக்கையாகவும், காமெடியாகவும் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


Share it if you like it