ஸ்ரீராமநவமியை ஒட்டி, பெங்களூரு வித்யாரண்யபுராவில், நேற்று முன்தினம் சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, அவ்வழியாக பைக்குகளில் வந்த சில இளைஞர்கள், ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடக் கூடாது என்றும், வேறொரு மதத்தின் கடவுள் பெயரை தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி தாக்குதல் நடத்தினர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தகவல் அறிந்த மத்திய விவசாய துறை இணை அமைச்சரும், பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளருமான ஷோபா, நேற்று முன்தினம் நள்ளிரவு, பாதிக்கப்பட்ட இளைஞரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும்படி வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மாநில பா.ஜ., பொதுச்செயலர் தம்மேஷ்கவுடா தலைமையில் அக்கட்சியினர் நேற்று வித்யாரண்யாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பின், அங்கேயே போராட்டம் நடத்தினர்.
இது குறித்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கின்றன. ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதை பார்க்கும் போது, நாம் இந்தியாவில் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தானில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.