திமுக மேயர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை !

திமுக மேயர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை !

Share it if you like it

கடலூர் திமுக மேயர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் அதிமுக பிரமுகரின் வீட்டில் ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வேட்பாளர்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுடன் வருமான வரித் துறையினரும் இணைந்து தனியாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில் இதுவரை கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித் துறையை பொருத்தவரை, தங்களது கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகாரின் அடிப்படையிலே சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, தேர்தல் பறக்கும் படை சோதனையின்போது, ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால், அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் பிரமுகர்கள், அவர்களது உறவினர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் வருமான வரித் துறை இணை ஆணையர் பாலமுருகன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று கடலூர் திருப்பாதிரிபுலியூர் போடிசெட்டி தெருவில் உள்ள மாவட்ட திமுக பிரதிநிதி ராமு வீட்டில் சோதனை நடத்தினர். தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள கடலூர் மாநகராட்சி திமுக மேயர் சுந்தரி ராஜா வீட்டில் சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து கடலூர் சாவடி, பெண்ணை கார்டன் பகுதியில் வசித்து வரும் கடலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயசுந்தரம், கடலூர் கோண்டூரில் கடலூர் வடக்கு ஒன்றிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் விக்ரமன் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் துறைமுகம் பகுதி திமுக செயலாளரான வழக்கறிஞர் பாபு வீடு, அதே பகுதியில் உள்ள 35-வது வார்டு செயலாளர் அன்பு வீடு, பாதிரிகுப்பத்தில் உள்ள கடலூர் தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் மணிமாறனின் வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

இதற்கிடையே, சென்னை பள்ளிக்கரணையில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பல்லாவரம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் லிங்கராஜ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நள்ளிரவு 12 மணி அளவில் சோதனை நடத்தினர்.

பள்ளிக்கரணையில் ரெடிமிக்ஸ் கான்கிரீட், ஜல்லி கற்கள், சிமென்ட், எம்-சாண்ட் மணல் விற்பனை செய்து வரும் அவரது ‘பிஎல்ஆர் புளு மெட்டல்’ விற்பனை நிலையம், பல்லாவரத்தில் உள்ள அவரது வீடு உட்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இவர் அதிமுக பிரமுகர் என்றும் கூறப்படுகிறது.

சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் லிங்கராஜின் நிறுவனத்தில் இருந்து ரூ.1 கோடி, அவரது வீட்டில் இருந்து ரூ.1.85 கோடி என கணக்கில் வராத ரூ.2.85 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் அவரிடம் வருமான வரித் துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தீராம்பட்டி மலையாண்டி தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாசம் (54). நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின்பேரில், வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். வாக்குப்பதிவு நெருங்கிய நிலையில், திமுக, அதிமுக பிரமுகர்களின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *