பாபாசாகேப் அம்பேத்கர்- மஹாபரிநிர்வான் திவாஸ்
இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்றழைக்கப்படும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று. மஹாபரிநிர்வான் திவாஸ் என்ற பெயரில் அனுசரிக்கப்படும் அவரது நினைவு நாளில் இந்த தேசம் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.
அம்பேத்கரின் நினைவு தினமான இன்று டில்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர்.அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அவரது போராட்டங்கள் கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கை அளித்ததாகக் கூறினார்.
பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட அம்பேத்கர் ஏப்ரல் 14, 1891 இல் மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் பிறந்தார். அவரது முழு பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அவரது பெற்றோரான பீமாபாய் சக்பால் மற்றும் ராம்ஜி ஆகியோருக்கு பதினான்காவது குழந்தை அவர்.
“சக்பால்” என்பது பீம்ராவின் குடும்பப்பெயர். ஆனல் சமூக-பொருளாதார பாகுபாடு மற்றும் சமூகத்தின் உயர் வகுப்பினரின் மோசமான நடத்தை ஆகியவற்றைத் தவிர்க்க, அவர் ஒரு பிராமண ஆசிரியரின் உதவியுடன் தனது குடும்பப் பெயரை “சக்பால்” என்பதில் இருந்து “அம்பேத்கர்” என்று மாற்றினார்.
அம்பேத்கர் சிறுவயதிலிருந்தே சாதிய பாகுபாட்டை அனுபவித்தவர். அம்பேத்கரின் தந்தை இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மகாராஷ்டிராவில் உள்ள சதாராவில் குடியேறிய போது அங்கு உள்ளூர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
அந்த பள்ளியில் அவரது சாதி காரணமாக அம்பேத்கர் வகுப்பறையில் ஒரு மூலையில் தரையில் உட்கார வைக்கப்பட்டார். ஆசிரியர்கள் அவருடைய நோட்டுப் புத்தகங்களைத் தொட மாட்டார்கள். இந்த அவமானங்களை சகித்து கொண்டு அம்பேத்கர் தனது படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். கடந்த1908ல் தனது மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
1913ல் அம்பேத்கர் தனது தந்தையை இழந்தார். அதே வருடம் பரோடா மகாராஜா அம்பேத்கருக்கு உதவித்தொகை வழங்கி, மேல்படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்.
அமெரிக்காவிலிருந்து டாக்டர் அம்பேத்கர் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் படிப்பதற்காக லண்டன் சென்றார். பின் இந்தியா திரும்பிய அம்பேத்கர் மகாராஜாவின் உதவியுடன் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக பல கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார். 1920 செப்டம்பரில், போதிய நிதியைக் குவித்த பிறகு, அம்பேத்கர் தனது படிப்பை முடிக்க லண்டனுக்குத் திரும்பினார். பாரிஸ்டர் ஆகி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று நாடு திரும்பினார்.
பின் இந்தியாவில் வழக்கறிஞராக பணியாற்றிய அம்பேத்கர் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக பல வழக்குகளில் நின்று போராட்டி வெற்றி பெற்றார். மும்பையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த போது பட்டியலின குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான பணிகளில் ஈடுபட்டார்.
1927களில் பட்டியலின மக்களுடன் இணைந்து ஆலய நுழைவு போராட்டம், பொது குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் ஆகியவற்றை முன்னெடுத்து நடத்தினார்.
பட்டியலின மக்களுக்கு நடத்தப்படும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல பஹிஷிரித் பாரத், ஈக்குவாலிட்டி ஜந்தா போன்ற பெயர்களில் சொந்தமாக பத்திரிகைகளை நடத்தினார் அம்பேத்கர். தீண்டாமைக்கு எதிராக பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
1947 இல், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, வங்காளத்தில் இருந்து அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரை, சட்ட அமைச்சராக தனது அமைச்சரவையில் சேர அழைத்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய சபை ஒரு குழுவிடம் ஒப்படைத்தது. டாக்டர் அம்பேத்கர் இந்த வரைவுக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 1948 இல், டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பின் முன் வரைவை வழங்கினார், இது நவம்பர் 26, 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1951 ஆம் ஆண்டு அம்பேத்கர் இந்திய நிதி ஆணையத்தை நிறுவினார். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரியை அவர் எதிர்த்தார். அவர் பொருளாதாரத்தை நிலைப்படுத்த நில வருவாய் வரி மற்றும் கலால் வரி கொள்கைகளில் பங்களித்தார். நிலச் சீர்திருத்தம் மற்றும் மாநிலப் பொருளாதார வளர்ச்சியில் அவர் முக்கியப் பங்காற்றினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களுக்கு சம உரிமை வழங்குவது முக்கியம் என வலியுறுத்தினார்.
1950 ஆம் ஆண்டு பௌத்த அறிஞர்கள் மற்றும் துறவிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்ற அம்பேத்கர் புத்த மதத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். பின் புத்த மதத்திற்கும் தன்னை மாற்றிக்கொண்டார். கடந்த 1955 இல் பாரதிய பௌத்த மகாசபையை அம்பேத்கர் நிறுவினார். அம்பேத்கர் எழுதிய புத்தகமான “புத்தரும் அவரது தர்மாவும்” அவரது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது.
டாக்டர். அம்பேத்கர் ஒரு சிறந்த அறிஞர், வழக்கறிஞர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர். நம் நாட்டில் பல்லாயிரம் வருடங்களாக ஊறியிருந்த தீண்டாமை என்ற நோயை நீக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க இறுதிவரை போராடினார்.
அவரது அரும்பணிகளால் மக்கள் அவரை பாபாசாகேப் என்று அன்போடு அழைத்தனர். அதன் அர்த்தம் மதிப்பிற்குரிய தந்தை என்பதாகும்.
“மனசுதந்திரமே உண்மையான சுதந்திரம். சங்கிலியில் கட்டபடாவிட்டாலும் மனம் சுதந்திரமாக இல்லாதவன் அடிமையே, சுதந்திரமானவன் அல்ல. சிறையில் இல்லாவிட்டாலும் மனம் சுதந்திரமடையாதவன் கைதிதான், சுதந்திரமானவன் அல்ல. உயிருடன் இருந்தும் மனம் சுதந்திரமாக இல்லாதவன், இறந்ததை விடச் சிறந்தவன் அல்ல. மனச் சுதந்திரமே ஒருவன் இருப்பதற்கான ஆதாரம்.”
“நீங்கள் சமூக சுதந்திரத்தை அடையாத வரை, சட்டம் வழங்கும் சுதந்திரத்தால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை.”
“பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்.”
“சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை போதிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன்’’ போன்ற பல கருத்துகளை அம்பேத்கர் கூறியுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் தேச பணிக்காக தன்னை அர்பணித்த அம்பேத்கர் கடந்த 1956ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானார். அவரை கவுரவிக்கும் வகையில் கடந்த 1990ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
அம்பேத்கரின் கொள்கைகள் உருவாக்கிய தாக்கம் தற்போதுள்ள நவீன இந்தியாவிலும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.
அம்பேத்கரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும்
அம்பேத்கர் தேச நலனுக்காக அரசியல் பேதங்களை பார்த்தது இல்லை. தேசத்துக்காக உழைத்தவர்களை அவர் மதித்தார். இன்றுள்ள இடதுசாரி ஆதரவு அரசியல் கட்சிகள் அம்பேத்கர் இந்து மதத்திற்கு எதிராக இருந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததாகவும் மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி வருகின்றன.
ஆனால் உண்மையில் அம்பேத்கர் இந்து மதத்தினர் இடையே நிலவும் சாதி பிரிவினைகளை மட்டுமே எதிர்த்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ் மீது அவர் நல்ல அபிப்பிராயம் இருந்தது. கடந்த 1939ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமுக்கு வருகை தந்திருந்த டாக்டர் அம்பேத்கர் அங்கு சாதி, மத பேதமின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவதை கண்டு ஆச்சரியமடைந்தார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த பிராமணரான தட்டோபந்த் தெங்கடி என்பவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் அம்பேத்கர். கடந்த 1951ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்த அம்பேத்கர் 1952ம் ஆண்டு மும்பையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தெங்கடியை தனது தேர்தல் அதிகாரியாக அவர் நியமித்தார்.
அம்பேத்கர் குறித்து தெங்கடி எழுதிய புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் மூலம் அம்பேத்கர் எதிர்த்தது சாதி பிரிவினையை மட்டும் தான் தவிர உயர்சாதி பிரிவினரை இல்லை என்பது தெளிவாகிறது. மேலும் சாதி,மத பாகுபாடில்லாமல் தேசத்திற்காக உழைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது அவர் நல்ல மதிப்பை கொண்டிருந்தார் என்பதும் உறுதியாகிறது.
இன்று அம்பேத்கரின் பெயரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளும் அமைப்புகளும் உண்மையில் நாட்டில் நிலவும் சாதி பிரிவினைகளை தடுக்க போராடுவதில்லை. மாறாக தங்கள் வாக்குவங்கிக்காக மக்கள் மத்தியில் சாதி வெறியை தூண்டிவிட்டு அவர்களை பிரித்து அரசியல் செய்து வருகின்றன. பொதுமக்களாகிய நாம் இனி விழித்து கொண்டு அம்பேத்கரின் கனவை நனவாக்க பாடுபட வேண்டும்.
- நிரஞ்சனா