பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. இந்த சூழலில், வங்கதேசத்தில் ஒரே நேரத்தில் 14 கோயில்களை உடைத்து சேதப்படுத்தி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஹிந்து இளம்பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு முஸ்லீமாக மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, வங்கதேசத்தில் ஹிந்து பண்டிகைகளின்போது ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்துவது அரங்கேறி வருகிறது. கடந்தாண்டு துர்கா பூஜையின்போதும், விநாயகர் சதுர்த்தியின் போதும் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உயிர் மற்றும் உடைமைக்கு பாதுகாப்பில்லாமல் பதற்றத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், தைப்பூச தினமான நேற்று வங்காளதேசத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தாகுர்கானின் பலியடாங்கியில் உள்ள 14 ஹிந்து கோயில்களை முஸ்லீம் அடிப்படை வாதிகள் உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து இக்கிராமத்தில் வசிக்கும் ஹிந்து சமூகத்தின் தலைவரான பித்யநாத் பர்மன் கூறுகையில், “சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், கடப்பாறை, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கோயில்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.. இவ்வாறு மொத்தம் 14 கோயில்களை நாசப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், சிலைகளை துண்டு துண்டாக உடைத்து, அருகிலுள்ள குளத்தில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தெரியவில்லை. இருட்டு நேரம் என்பதால் அவர்களை யாராலும் பார்க்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
சங்க பரிஷத் தலைவரும், ஹிந்து தலைவருமான சமர் சட்டர்ஜி கூறுகையில், “கோயில்கள் இடிக்கப்பட்ட சம்பவம் வருத்தமும் வேதனையும் அளிப்பதாக இருக்கிறது. இது ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் கலந்து வசிக்கும் பகுதி. இங்கு ஹிந்துக்களுடன் நல்லுறவு கொண்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இரு தரப்பினருக்கும் இடையே எந்த சர்ச்சையும் இல்லை. அப்படிப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது வியப்பாக இருக்கிறது. உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இச்சம்பவம் வங்கதேச ஹிந்துக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.