அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேரை குஜராத்தில் போலீஸார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் வசிக்கும் சிலர், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துகொண்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக மாநில பயங்கரவாத தடுப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் ஆமதாபாத் நகரில் வசித்து வந்த 4 இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும், அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு செயல்பட்டு வரும் அல்கொய்தா அமைப்பினருடன் இவர்களுக்கு தொடர்பிருப்பதும், முறையாக பயிற்சி பெற்றதும் தெரியவந்திருக்கிறது.
இவர்கள் நம் நாட்டிற்குள் ஊடுருவி, ஆமதாபாத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைபார்த்து வருவதுபோல் செயல்பட்டு, இங்குள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இதற்காக போலி ஆதார் கார்டுகளை இவர்களே தயாரித்திருக்கிறார்கள். மேலும், பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். குஜராத்தில் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களில் வசிக்கும் சில இளைஞர்களையும் மூளைச்சலவை செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.