பாரத பிரதமர் மோடி குறித்த பி.பி.சி. தொலைக்காட்சியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் கே.அந்தோணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அப்போது, அம்மாநில முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. இந்த சூழலில், மேற்கண்ட கலவரம் தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் அரசு ஊடகமான பி.பி.சி. கடந்த 17-ம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா – மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படத்தில், மேற்கண்ட கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம், மேற்கண்ட ஆவணப்படம் கண்ணியமானது அல்ல; மதிப்பில்லாத ஒரு கதையை மீண்டும் தூண்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரசார படம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகமும், இது ஒரு காலனியாதிக்க மனநிலை என்று மத்திய அரசும் விமர்சித்திருந்தன.
பி.பி.சி. தொலைக்காட்சியின் மேற்கண்ட சர்ச்சைக்குரிய 2 பாக ஆவணப்படம் வெளியான நிலையில், இதற்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய ராணுவ அமைச்சருமான கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் கே.அந்தோணி. அப்போது, “பா.ஜ.க.வுடன் எனக்கு பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், இந்தியாவுக்கு எதிரான பாரபட்சத்துடன் செயல்படக்கூடிய, இங்கிலாந்து அரசின் ஆதரவை பெற்ற ஒரு தொலைக்காட்சியின் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பார்வையை அப்படியே முன்வைப்பது நமது இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும்” என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அனில் கே.அந்தோணி, “ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியில் இருக்கும் யாருடனும் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால், நமது நாட்டின் 75-வது சுதந்திரதின ஆண்டில், வெளிநாட்டினரோ அல்லது அவர்களது நிறுவனமோ நமது நாட்டின் இறையாண்மையை குறைத்து மதிப்பிட அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தார். அதேசமயம், கேரள மாநில காங்கிரஸ் கட்சியோ, மேற்கண்ட ஆவணப்படம் கேரளா முழுவதும் திரையிடப்படும் என்று கூறியிருந்தது. இந்த சூழலில், மாநில காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு எதிரான கருத்தை அனில் கே.அந்தோணி முன்வைத்தது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில்தான், பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனில் கே.அந்தோணி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் எனது ட்வீட்டை திரும்பப் பெறும்படி கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன். அன்பு பரப்பப்படுவதை ஆதரிப்பவர்களின் முகநூல் பக்கங்கள் வெறுப்பும், துஷ்பிரயோகமுமாக இருக்கிறது. இதற்கு பெயர் பாசங்கு. வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்” என்று தெரிவித்திருப்பதோடு, தனது ராஜினமா கடிதத்தையும் இணைத்திருக்கிறார்.
அனில் கே.அந்தோணியின் செயல், தேசப்பற்றாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.