கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டில் உள்ளது ‘ராமேஸ்வரம் கபே’ உணவகம். இந்த உணவகத்தில், இம்மாதம் 1ம் தேதி பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் உணவக பணியாளர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ‘சிசிடிவி’ கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் தொப்பி அணிந்த நபர் குண்டு வெடிப்புசம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 2 கி.மீ., தொலைவில் குற்றவாளி பயன்படுத்திய தொப்பி கண்டெடுக்கப்பட்டது. அந்த தொப்பியை வைத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அந்த தொப்பி வாங்கப்பட்டு அதற்கு ரசீது வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த முஸ்வீர் ஹீசைன் ஷாகிப், அப்துல் மாத்ரின் தாஹா ஆகிய இருவர் ஈடுபட்டிருப்பதாக என்.ஐ.ஏ.,சந்தேகித்துள்ளது.
இருவரும் சென்னை வந்து திருவல்லிக்கேணி பகுதியில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த பின் கேரளா மாநிலம் வழியாக மீண்டும் சென்னை வந்த அவர்கள் ஆந்திரா மாநிலம் நெல்லுார் சென்று அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட தொப்பியில் முடிகள் ஒட்டியிருந்தன. அவற்றின் வாயிலாக குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.
தற்போது குற்றவாளிகளின் மொபைல் போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை சென்னை மற்றும் நெல்லுாரில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.