ஆங்கிலேயர் ஆட்சியில் சீரழிந்த ஆலயங்களை புணரமைத்த பக்தவத்சலம்

ஆங்கிலேயர் ஆட்சியில் சீரழிந்த ஆலயங்களை புணரமைத்த பக்தவத்சலம்

Share it if you like it

பக்தவத்சலம்
(தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்)

https://youtu.be/sgzK6IP_7OE

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நசரத்பேட்டையில், செல்வந்தர் குடும்பத்தில் (1897) பிறந்தார். இவருக்கு 5 வயதாக இருந்த போது, தந்தை காலமானார். தாய்மாமன்களின் ஆதரவில் வளர்ந்தார். சென்னையில், ஆரம்பக் கல்வி பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில், பட்டம் பெற்றார். படித்து முடித்ததும், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அது, இந்திய விடுதலைப் போராட்டங்கள், விறுவிறுப்பாக நடந்த நேரம். மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட், திலகர், விபின் சந்திரபால் ஆகிய தலைவர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். மது ஒழிப்பு இயக்கத்தில் பங்கேற்றார். சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, போலீஸ் தடியடியில் காயமடைந்தார்.


நாடு விடுதலை பெற்றதும், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1946 முதல் 1962 வரை, பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1963-ல், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தனது ஆட்சிக் காலத்தில், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வந்தார்.


ரூ.5 லட்சம் நிதியுதவி செய்பவர்களின் பெயரிலேயே கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்து, பணக்காரர்கள் பலரையும் கல்வி வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தார். தமிழ், ஆங்கிலத்தில் நல்ல புலமையும், தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். சிறந்த பக்தர். ‘இவரோடு பழகுவது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குச் சமமானது’ என்று, இவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மனித நேய உணர்வோடு, வாழ்ந்தவர். பொது வாழ்விலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மை, தூய்மையைக் கடைபிடித்தவர்.


சட்டப் பேரவையில் எப்படி நடந்து கொள்வது என்பதற்கு, இலக்கணமாகத் திகழ்ந்தவர். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் வல்லவர். மிக எளிமையானவர், எதிர்க்கட்சியினரும் விரும்பும் தலைவராக விளங்கியவர், தலைசிறந்த தேசியவாதி, மக்கள் நலனையே பெரிதாக நினைப்பவர், சிறந்த நிர்வாகி என்றெல்லாம் போற்றப்பட்ட எம்.பக்தவத்சலம் 90-வது வயதில் (1987) மறைந்தார். தமிழ்நாடு அரசு எம்.பக்தவத்சலம் நினைவைப் போற்றும் வகையில், சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்து, எம்.பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப் பட்டுள்ளது.


வழக்கறிஞர் பட்டம் பெற்ற பக்தவத்சலம், அதைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்காமல் சுதந்திரப் போராட்டத்தில் முழு மூச்சாகப் பங்கெடுத்தார். மும்முறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட சிறைகளில் தண்டனையை அனுபவித்தார். அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராடுவதால், சிறையில் எந்தவிதமான சலுகைகளையும் கோரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர்.


1964-ல், காமராஜர் காங்கிரஸின் தேசியத் தலைமையை ஏற்றுக் கொள்ள, அவரையடுத்து தமிழக முதல்வராக, பக்தவத்சலம் பொறுப்பேற்றுக் கொண்டார். உட்கட்சியில் தேர்தல் நடத்தப்பட்டு, ஜனநாயக முறையில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஆனால், வாய்ப்பும் பெரும்பான்மையும் மட்டுமே அவர் முதல்வரானதற்குக் காரணமல்ல. 1937-ல் ராஜாஜியின் முதல் அமைச்சரவையிலேயே அங்கம் வகித்தவர்.
சுதந்திரத்துக்கு முன்பும், பின்புமாக காங்கிரஸ் அமைச்சரவைகளில் விவசாயம், கல்வி, பொதுப் பணித்துறை, அற நிலையத்துறை என பல்வேறு துறைகளில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அமைச்சரவை அனுபவம் பெற்றவர். நல்ல நிர்வாகி, என்று பெயரெடுத்தவர்.


1946-ல், பொதுப் பணித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது தான், ‘கீழ்பவானி அணைக்கட்டுத் திட்டம்’ உருவானது. கொங்கு மண்டலத்தின் முன்னேற்றப் படிகளில், அது முக்கியமான ஒன்று. அவர் விவசாயத் துறை அமைச்சராக, பதவி வகித்த போது தான், கோவை விவசாயக் கல்லூரி மேம்படுத்தப்பட்டது. அதுவே இன்று பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது.


அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான கோயில்களை, புனரமைத்தார். அதிக வருமானம் கிடைக்கும் கோயில்களின் சார்பில், கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். தருமபுர ஆதீனம் அவருக்கு ‘நல்லறங்காவலர்’ என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். கோயில் நிர்வாகத்தில் அரசின் தலையீடு என, அந்த நாட்களில் எந்தக் குற்றச்சாட்டும் எழுந்ததில்லை.
தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் ஆங்கிலம் கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதற்காகப் பணியிடைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. பின்னாட்களில், தமிழக மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், தங்களது உயர் படிப்புகளைத் தொடர, இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. அதே நேரத்தில், கல்லூரிகளில் தமிழில் கற்கும் வாய்ப்பு உருவானதும், அவரது ஆட்சிக் காலத்தில் தான்.


வகுப்புகளைத் தமிழில் நடத்துவதற்கு, மானியங்களை அளித்து ஊக்குவித்தார். இவர் காலத்தில் தொடங்கப்பட்ட, ‘தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம்’ தான், இன்று, ‘பாடநூல் நிறுவனமாக’ விரிந்து பரந்துள்ளது.


அவரது இறுதிக் காலத்தில், பலமுறை அவருக்கு, ஆளுநர் பதவிக்கான அழைப்புகள் வந்த போது, நான் பென்ஷன்வாதியல்ல, ‘அரசியல்வாதி’ என்று சொல்லி, அதை மறுத்தவர்.


பக்தவத்சலத்தின் தந்தையார் இறந்த போது, அவருக்கு 100 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தில், ஒரு சென்ட் அளவு கூட பக்தவத்சலத்தால் பாதுகாக்கப்படவில்லை. அரசியலுக்காக அவர் அளித்தது தான் அதிகமே ஒழிய, அங்கிருந்து பெற்றுக் கொண்டது பெயரையும், புகழையும் மட்டும் தான். அவரது மகள்களில் ஒருவரும், சமூக சேவகியான சரோஜினி வரதப்பனுக்கு சட்டமன்ற மேலவை அல்லது நாடாளுமன்ற மாநிலங்களவையில் இடம் கிடைக்கலாம் என்ற வாய்ப்பு வந்தது. ஒரு வீட்டில் இருவர் பதவி வகிக்கக் கூடாது என, அந்த யோசனைக்கு முட்டுக்கட்டை போட்டார்.


குடும்பமும், உறவுகளும் எப்போதும் எந்த உதவியும் அவரிடமிருந்து பெற முடியாது என்பதில் உறுதியாக இருந்தார், பக்தவத்சலம். மக்களுக்கு, அவர் வீடும், அலுவலகமும் கதவுகளைத் திறந்தே வைத்திருந்தன. காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் யாரும் அவரைச் சந்தித்துப் பேச முடியும்.


எவ்வளவு நல்ல நிர்வாகியாக இருந்தாலும், தியாகங்களை செய்தாலும் ‘மக்களா; கட்சியா?’ என்ற சூழல் வரும் போது, அரசியலில் மக்கள் பக்கம் நின்று, அவர்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களே, மக்கள் மனதில் நிலைத்திருப்பார்கள் என்பதற்கான வரலாற்றுப் பாடம், பக்தவத்சலம்.

  • அருள் சிவசங்கரன்

Share it if you like it