அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க.வில் விவசாயிகள் இணையும் நிகழ்ச்சி கோவை நவக்கரையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதையடுத்து, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை இவ்வாறு பேசினார் ;
ஈரோடு கிழக்கு தேர்தல் விதிமீறல் என்பது 500 வழக்குகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற பரிசு பொருட்களை கொடுத்துதான் தேர்தல் நடைபெற வேண்டுமா? ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஒரு வாக்காளர்களுக்கு சராசரியாக ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளனர்.
கொள்ளை அடிக்கும் பணத்தை தேர்தலின்போது வெளியே எடுக்கின்றனர். கமிஷன் பெற்று சம்பாதித்த பணத்தை பினாமி மூலம் துபாய்க்கு அனுப்பி, அங்கிருந்து மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து தேர்தலில் செலவு செய்கின்றனர். இதனால், அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர்.
இளைஞர்களை அரசியலுக்கு வாருங்கள் என்று கூறினால், ஈரோடு கிழக்கு தேர்தலை பார்த்து ஓடுகின்றனர். சட்டப்பேரவை தேர்தலுக்கு தொகுதிக்கு ரூ.45 கோடி, இடைதேர்தல் என்றால் ரூ.100 கோடியை தாண்டுகிறது. ஆளுங்கட்சி ரூ.250 கோடி வரை செலவு செய்கின்றது. தேர்தல் விதிமீறல் தொடர்பான எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிற்பதில்லை.
அதனால், அதுதொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அரவக்குறிச்சி, திருமங்கலம் போல் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால், புதியவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என வேதனையுடன் அவர் கூறினார்.