‘ரீல்’ விடும் போலீஸ்: அண்ணாமலை காட்டம்!

‘ரீல்’ விடும் போலீஸ்: அண்ணாமலை காட்டம்!

Share it if you like it

பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாடு போலீஸ் கட்டுக்கதை விடுகிறது. ஆகவே, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ். காட்டமாகக் கூறியிருக்கிறார்.

சென்னை தி.நகரில் அமைந்திருக்கும் தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நள்ளிரவு 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. நள்ளிரவில் குண்டு வீசப்பட்டதால், உயர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீஸார், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில், நந்தனம் பகுதியைச் சேர்ந்த கர்த்தா வினோத் என்பவரை கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அவர் ஒரு குடிகாரர் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்துவிட்டதால் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக சொன்னதாகவும் போலீஸார் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், போலீஸாரின் இந்த கூற்றுதான் கட்டுக்கதை என்று குற்றம்சாட்டி இருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. “போலீஸார் சொல்வது நம்பும்படியாக இல்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீஸார் இன்னும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. தடயவியல் நிருபர்கள் சோதனை செய்யவில்லை. ஆனால், அதற்குள் தண்ணீர் ஊற்றி தடயத்தை அழித்து விட்டது மாநில போலீஸ். மேலும், குற்றவாளியின் வாக்கு மூலத்தை வைத்து போலீஸார் எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது. தீர விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும். யார் சொல்லி குண்டு வீசினார்கள்? என்ன காரணத்திற்காக வீசினார்கள் என்பது தெரியவேண்டும்.

ஆனால், இது மாநில போலீஸாரால் சாத்தியமாகாது. காரணம், மாநில போலீஸ் தமிழக அரசாங்கத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால், அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் மத மாற்றத்துக்கு வற்புறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஏன் சொல்ல வேண்டும்? தற்போதும் அதேபோலதான் போலீஸ் ஒரு கட்டுக்கதை காரணத்தை சொல்கிறது. இதெல்லாம் ஒரு பேட்டர்ன். இதுபோன்ற காரணங்களால்தான், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. தவிர, பா.ஜ.க. தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதை டெல்லி தலைமை மிகவும் சீரியஸாக பார்க்கிறது. எனவே, இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரிக்க வேண்டும்” என்று கடுமையாகக் கூறியிருக்கிறார்.


Share it if you like it