சினிமா பாணியில் வெடிகுண்டு வீசி, ஓட ஓட விரட்டி பா.ஜ.க. நிர்வாகி கொலை: கையாலாகாத தி.மு.க. அரசு!

சினிமா பாணியில் வெடிகுண்டு வீசி, ஓட ஓட விரட்டி பா.ஜ.க. நிர்வாகி கொலை: கையாலாகாத தி.மு.க. அரசு!

Share it if you like it

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி, சினிமா பாணியில் வெடிகுண்டு வீசியும், ஓட ஓட விரட்டியும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பி.பி.ஜி.சங்கர். இவர், வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், பா.ஜ.க. எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்கிற மனைவியும், 15 மற்றும் 12 வயதில் இரு மகன்களும் உள்ளனர். பழைய இரும்பு வாங்கி விற்கும் (ஸ்கிராப்) தொழில் செய்து வந்தார் சங்கர். இந்த சூழலில், சென்னை கொளத்தூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் சங்கர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை நாசரத்பேட்டை வரதராஜபுரம் அருகே வந்தபோது, 2 கார்களில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல், சங்கர் காரை வழிமறித்து, நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த பி.பி.ஜி.சங்கர், காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடியிருக்கிறார். ஆனால், விடாமல் அவரை விரட்டிச் சென்ற கும்பல், நடுரோட்டில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, காரில் ஏறி தப்பிச் சென்றது. பா.ஜ.க. நிர்வாகியும், ஊராட்சி மன்றத் தலைவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக பா.ஜ.க. பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பி.பி.ஜி.சங்கர், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கையாலாகாத தி.மு.க. ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் தமிழக பா.ஜ.க. போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it