ரோட்ல டீ குடிக்கிறவன் மாதிரி கேள்வி கேட்கக் கூடாது: நிருபரை விளாசிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

ரோட்ல டீ குடிக்கிறவன் மாதிரி கேள்வி கேட்கக் கூடாது: நிருபரை விளாசிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

Share it if you like it

8-ம் கிளாஸ் படிக்கிற பையன் மாதிரியோ, ரோட்ல டீக்குடிக்கிற பையன் மாதிரியோ கேள்வி கேட்கக் கூடாது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபரை விளாசித் தள்ளினார்.

6 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றிருந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நேற்றிரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பா.ஜ.க. சார்பாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றேன். பிரிட்டன் பார்லிமென்டில் எம்.பி.க்களுடன் உரையாற்றினேன். இலங்கை பிரச்னை, வடகிழக்கு பிரச்னை போன்றவற்றில் இந்தியா எடுத்திருக்கக்கூடிய முடிவுகளுக்கு இங்கிலாந்து தமிழர்கள் பாராட்டுகிறார்கள்.

எனது தமிழக நடைபயணத்தை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார். அவரது தேதிக்காக காத்திருக்கிறோம். இன்னும் 2 நாட்களில் தேதி பற்றிய தகவல் வரும். ஜூலை 2-வது வாரத்தில் கட்சி சார்பாக மற்றொரு ஊருக்கு பயணம் செய்ய உள்ளேன். இதன் பிறகு 2 அல்லது 3-வது வாரத்தில் நடைப்பயணம் தொடங்க உள்ளேன். ‌ஜூலை 9-ம் தேதி தி.மு.க. ஃபைல்ஸ்-2 வெளியிடப்படும்.

சிதம்பரம் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தி.மு.க. அரசு முன்னுக்குப் பின் முரணாக சிதம்பரம் கோயில் விவகாரத்தில் ‌செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களை வைத்து ஒவ்வொரு புதிய பிரச்னையை தி.மு.க.‌ அரசு உருவாக்குகிறது” என்றார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர், லண்டனில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரரை ரகசியமாக சந்தித்ததாக சொல்கிறார்களே என்று கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை 8-ம் கிளாஸ் படிக்கிற பையன் மாதிரி கேள்வி கேக்கக்கூடாது. ரோட்ல டீ குடிக்கிறவன் மாதிரி கேள்வி கேக்கக்கூடாது. நீங்க கேக்குறது முட்டாள்தனமா இல்லயா? என ஆவேசமடைந்தார். மேலும், சோர்ஸ் யார்? யார் உங்களுக்கு சொன்னார்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it