தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்!

தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்!

Share it if you like it

தி.மு.க.வின் சின்னத்தை முடக்குவதோடு, அக்கட்சியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில், “தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான தி.மு.க.வின் செயலாளர் ஒருவர், பிரதிநிதித்துவ அடிப்படையில் ஆணையம் வகுத்துள்ள கொள்கைகளை மீறியுள்ளார் என்பதை தேர்தல் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். “திராவிட” இயக்கத்தின் நிறுவனர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் (தி.மு.க.வினரால் பெரியார் என்று அழைக்கப்படுபவர்), தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலைக்கு ஆளாக வேண்டும் என்று கூறினார். இந்த அச்சுறுத்தல் தமிழ்நாட்டில் உள்ள பிராமண சமூகம் என்று அழைக்கப்படுவோரின் அடிப்படை உரிமைகளை நேரடியாக பாதிக்கிறது. அதாவது, பிராமணர்கள் தேர்தலில் வாக்களிக்கச் செல்லக்கூடாது என்ற அடிப்படையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் இது. இதன் மூலம், பிராமண சமூகத்தின் வாக்குரிமையை பறித்து தி.மு.க. எளிதாக வெற்றி பெறலாம் என்பது கணக்கு.

ஆகவே, தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலை அச்சுறுத்தல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும், தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிடும் சுற்றறிக்கைகளையும் மீறும் செயலாகும் என்பதை முதன்மைப் படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன். தி.மு.க.வின் பதிவை ரத்து செய்வதற்கும், தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தை திரும்பப் பெறுவதற்கும் சட்டப்பூர்வ ஆதாரங்கள் மற்றும் வாதங்களைச் சேர்க்கவும், வழக்கை நிரூபிக்கத் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன். இது அவசரமான விஷயம், தி.மு.க.வினரை நீதியின் முன்பு நிறுத்த ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “1973-ல் பகுத்தறிவு கொள்கையை பரப்புகிறேன் என்று சொல்லி ஈரோடு வெ.ராமசாமி பல்வேறு கூட்டங்களை நடத்தி வந்தார். காரைக்குடியில் நடந்த கூட்டத்தில், ‘பகுத்தறிவு கொள்கைக்கு எதிராக செயல்படும் பிராமணர்களை கொல்ல வேண்டும்’ என்று பேசினார். இது தொடர்பான ஆடியோ பதிவு, சிலரால் இப்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் ராஜிவ் காந்தி என்பவர், சமூக வலைதளம் வாயிலாக ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார். குறிப்பிட்ட 3 சதவீதம் பேரால்தான், சூத்திரர்களுக்கான உரிமை, வேலைவாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன. ஈ.வெ.ரா. சொன்னதை சூத்திரர்கள் அன்றைக்கே செய்திருந்தால், உரிமைகள் பறிபோவது தடுக்கப்பட்டிருக்கும். இன்றைக்கும் குறிப்பிட்ட அந்த 3 சதவீதம் பேர் முக்கிய இடங்களில் அமர்ந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதாவது, பிராமணர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக, அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், ‘தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் காந்தியின் கருத்துதான் தி.மு.க.வின் கருத்தா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு, தி.மு.க. தரப்பில் பதில் இல்லை. ஆக, மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி. ‘ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை படுகொலை செய்ய வேண்டும்’ என்று ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளர் சொல்கிறார் என்றால், அவரது கருத்தால் சமூகத்தின் அமைதி கெடும்; கலவரம் வெடிக்கும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எந்த கருத்தை வேண்டுமானாலும் சமூகத்தில் விதைத்து விட்டு, அப்படியே கடந்து போய் விட முடியாது. சமூகத்தில் கலவரத்தை துாண்டும் வகையிலான பேச்சை அனுமதிக்க முடியாது; சட்டமும் அனுமதிக்கவில்லை. எனவே, செய்தித் தொடர்பாளர் சொன்ன அந்த கருத்தை, அக்கட்சியின் கருத்தாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

ஒரு அரசியல் இயக்கம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போல நடந்து கொண்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்ய முடியும். ஆகவேதான், தி.மு.க.வின் பதிவை ரத்து செய்வதோடு, அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்; சின்னத்தை முடக்கும்படியும் கேட்டிருக்கிறேன். தேர்தல் கமிஷன் விதிகள் தெளிவாக இருப்பதால், கட்டாயம் அதை செய்ய வேண்டும். இந்த கருத்து தொடர்பாக, தி.மு.க. மீது வழக்கு தொடுக்கவும் தயாராகி வருகிறேன். தமிழக கவர்னரிடமும் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க கேட்கப் போகிறேன். நாட்டில் அமைதியை கெடுத்து, அதன் வாயிலாக தி.மு.க. அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it