பாரத அன்னையை இழிவுபடுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருக்கும் கார்டூனுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. திருமாவளவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே வெடித்த மோதல் பெரும் கலவரமாகி இருக்கிறது. பொதுவாக பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற கலவரங்கள் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான். கர்நாடகாவில் தமிழர்களுக்கும், கன்னடர்களுக்கும் காவிரி விவகாரம் தொடர்பாக அவ்வப்போது பெரும் மோதல் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அப்போதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் கடுமையாக தாக்கப்படுவதும், தமிழக பஸ்கள், லாரிகள், கார்கள் அடித்து நொறுக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
அதேபோல தற்போது மணிப்பூரில் இரு சமூகத்தினரிடைய மோதல் வெடித்திருக்கிறது. இதில், குக்கி எனப்படும் பழங்குடியினர், மெயிட்டி எனப்படும் சமவெளிப் பகுதியில் வசித்து வரும் மக்களின் வீடுகளை தீவைத்து சூறையாடியதோடு, பலரையும் கொலை செய்து தீக்கிரையாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த மெயிட்டி இனத்தவர் பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, இரு பெண்களை நிர்வாணமாக்கி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நடந்த இச்சம்பவத்தை மையமாக வைத்து, பாரதத் தாயை இழிவுபடுத்தும் வகையில், பாரதத் தாயை துகிலுரிந்து, மானபங்கப்படுத்துவதுபோல கார்டூன் வரைந்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த கார்டூனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க. மாநில துணைச் செயலாளர் நாராயணன் திருப்பதி, “சமூக ஊடகங்களில் முதல்வரின் உருவப்படத்தை அவதூறாக சித்தரித்து பதிவிடுவோரை கைது செய்யும் காவல்துறை, இந்த கேலிச் சித்திரத்தை பகிர்ந்ததற்காக தொல்.திருமாவளவனை கைது செய்யுமா? பாரத அன்னையை இழிவுபடுத்தும் இந்த செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா? கலவரத்தை தூண்டும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.